டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் ஜான்சர் - பவார் பகுதியில் உள்ள கந்தார் கிராமத்தில் திருமணம், குடும்ப நிகழ்ச்சிகளில் திருமணமான பெண்கள், தங்க நகைகள் அணியக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பழங்குடியினர் பலர் வசிக்கும் அந்தக் கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற பழங்குடியினத் தலைவர்களின் கூட்டத்தில் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதன்படி, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் திருமணமான பெண்கள், தங்க கம்மல், மூக்குத்தி, தாலி ஆகியவற்றை மட்டும் அணியலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அவற்றைத் தவிர, ஆடம்பரமான தங்க நகைகளை அணியக்கூடாது என்றும் அதிரடியாக முடிவெடுக்கப்பட்டது. விதிமுறையை மீறினால் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என்று கிராமத் தலைவர்கள் அறிவித்தனர்.
“திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ஏழை, எளிய மக்கள் கடன் வாங்கி செலவு செய்யும் நிலை உள்ளது. ஆடம்பரச் செலவு செய்வது, தங்க நகைகளைப் போட்டுக்கொண்டு தங்கள் பணக்காரத்தனத்தைக் காட்டுவது போன்றவற்றை தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
“இனி, பெரிய தங்க நகைகளைத் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பெண்கள் அணியக்கூடாது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏழைகள் தங்கம் வாங்க முடியாது. அதனால் அவர்கள் கடன் வாங்கியாவது திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க நினைக்கின்றனர். இதுபோன்ற ஆடம்பரக் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்.
“திருமணம் என்பது புனிதமான நிகழ்ச்சி. அது தங்கள் செல்வத்தை, பணக்காரத்தனத்தைக் காட்டும் மேடையாக மாறிவிடக்கூடாது. சமூகத்தில் சமத்துவத்தை கொண்டு வரவேண்டும். அதற்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் அவசியம். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் ஏழை - பணக்காரர் என்ற வேறுபாடு இருக்கக்கூடாது. இந்தக் கட்டுப்பாடுகளை மீறினால் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்,” என்று கிராமத் தலைவர்கள் கூறினர்.

