கேரளா, கர்நாடகாவில் கனத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை

1 mins read
323dd337-574a-4eaf-821e-4c501a23442b
இம்மாதம் 22ஆம் தேதி வரை கேரளாவில் கனத்த மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - கோப்புப் படம்

திருவனந்தபுரம்: இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஒவ்வோர் ஆண்டும் பெய்யும் தென்மேற்கு பருவமழை 16 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த முறை முன்கூட்டியே பெய்யத் தொடங்கியுள்ளது. கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கொட்டித்தீர்க்கும் கனத்த மழையால் அணைகள் நிரம்பி வருகின்றன.

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர், வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது. அந்த ஐந்து மாவட்டங்களிலும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கண்ணூர், வயநாடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து கல்விக் கழகங்களுக்கும் மழை காரணமாக ஜூலை 19ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 15ஆம் தேதியிலிருந்து வட கேரளாவில் பெய்யும் கனத்த மழை, அடுத்த சில நாள்களுக்குத் தொடரும் என்று வானிலை ஆய்வகம் எச்சரித்தது.

கண்ணூர், காசர்கோடு போன்ற பகுதிகளில் மழை மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த இரண்டு பகுதிகளிலும் நாளை வரை சிவப்பு எச்சரிக்கை நிலை தொடரும். 22ஆம் தேதி வரை கேரளாவில் கனத்த மழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு ஆகியவற்றைச் சேர்ந்த மீனவர்கள் இம்மாதம் 22ஆம் தேதிவரை மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்