பெங்களூரு: நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு எல்க்ட்ரானிக் சிட்டியில் உள்ள நாராயணா ஹிருதாலயா மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்து ரஜினிகாந்த் உடனடியாக சென்னையிலிருந்து பெங்களூருக்குப் புறப்பட்டார்.
ரஜினியின் திரைத்துறை வாழ்க்கையை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர் சத்யநாராயணா, 84.
பேருந்து நடத்துநராக இருந்து பிறகு சென்னைக்கு வந்து திரைக் கல்லூரியில் படித்து நடிகராக மாறியவர் ரஜினிகாந்த். அவர் சென்னைக்கு வருவதற்கும் பிறகு சூப்பர் ஸ்டாராக வளர்வதற்கும் இருவர் முக்கியக் காரணங்களாக இருந்தனர். ஒருவர் ரஜினியின் நெருங்கிய நண்பர் ராஜ் பகதூர்; மற்றொருவர் அவரின் சகோதரர் சத்யநாராயணா.
திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களும் ரசிகர்களும் சமூக ஊடகங்களில் சத்யநாராயண ராவ் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
ரஜினி தற்போது பெங்களூரில் தங்கியிருந்து தம் சகோதரரின் சிகிச்சையின் முன்னேற்றத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தமிழக ஊடகங்கள் தகவல் தெரிவித்தன.

