தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இமாச்சல் பிரதேசத்தை மிரட்டும் மழை: 23 பேர் பலி; 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

2 mins read
2bcf20de-965f-4289-b233-1f3fc474ea25
மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், ஓடைகள், குட்டைகள் நிரம்பிவிட்டன. - படம்: ஊடகம்
multi-img1 of 2

சிம்லா: இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 23 பேர் பலியாகிவிட்டனர். பத்து மாவட்டங்களுக்கு இந்திய வானிலை நிலையம் அதி கன மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, ஏராளமான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல முக்கியமான சாலைகள் மூடப்பட்டுள்ளன.

இமாச்சலப் பிரதேசத்தில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு நாள்களாக நீடித்து வரும் பேய் மழையால், பியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்றும் இதன் எதிரொலியாக கர்சோக், பண்டோஹ், துனாக், தரம்பூர் ஆகிய பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், ஓடைகள், குட்டைகள் நிரம்பிவிட்டன. பல பகுதிகளில் வீடுகள், வாகனங்கள் சேதமடைந்தன.

தாழ்வான, ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றான சிம்லாவில் இருந்து செல்லும் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து நிலைகுத்தியுள்ளது.

சிம்லா-கல்கா பாதை உட்பட 129க்கும் அதிகமான சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

தரம்பூர் ஆற்றில் வெள்ளநீர் சுமார் 20 அடி உயரத்துக்கு பெருக்கெடுத்து ஓடுவதாக நேரில் பார்த்தவர்கள் அச்சத்துடன் கூறினர்.

மழை சார்ந்த விபத்து, இதர சம்பவங்களில் இதுவரை 23 பேர் பலியாகிவிட்டனர். பட்டாகுபாரி பகுதியில் ஐந்து மாடிக் கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்தனர்.

மழைநீர் சூழ்ந்துள்ள பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மண்டி, சிம்லா, கங்கரா, பிலாஸ்பூர், சோலன், சிர்மர், ஹமிர்புர், உனா, குல்லு, சம்பா ஆகிய 10 மாவட்டங்களில் அதி கன மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஜூலை முதல் வாரத்தின் இறுதி வரை கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை நிலையம் அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து, இமாச்சலப் பிரதேச மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்