வாக்குச்சாவடி முகவர் நியமிப்பில் ரகசிய மாற்றங்கள்: திரிணாமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

1 mins read
2c31d73f-879c-4cff-8434-43c5d209d690
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. - கோப்புப் படம்: telegraphindia.com / இணையம்

கோல்கத்தா: இந்தியத் தேர்தல் ஆணையம், மேற்கு வங்க மாநிலத்தில் தீவிரத் தேர்தல் மறுபரிசீலனை (எஸ்ஐஆர்) நடவடிக்கையைத் தொடரும் வேளையில் வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பதற்கான விதிமுறைகளை ரகசியமாக மாற்றுவதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

“வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பதற்கான விதிமுறைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் ரகசியமாக, வில்லத்தனமான முறையில் மாற்றியுள்ளது,” என்று திரிணாமூல் காங்கிரஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.

2023ஆம் ஆண்டுக்கான தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, வாக்குச்சாவடி முகவராக நியமிக்கப்படுபவர் அந்தப் பகுதியில் வசிக்கும் வாக்காளராக இருக்கவேண்டும்.

“ஆனால், மாற்றப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி உள்ள தொகுதியில் வாக்குச்சாவடி முகவர் இல்லாவிட்டால் அப்பகுதியில் உள்ள சட்டமன்றத் தொகுதியிலிருந்து வேறொருவரை வாக்குச்சாவடி முகவராக நியமிக்கலாம்,” என்று திரிணாமூல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. இது, பெரும் கேள்விகளை எழுப்புவதாக அக்கட்சி சாடியது.

இந்த விதிவிலக்கு அனுமதிக்கப்பட்டது ஏன் என திரிணாமூல் காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. பாரதிய ஜனதா கட்சிக்கு (பாஜக) அந்தந்தப் பகுதிகளில் வாக்குச்சாவடி முகவர்கள் இல்லாததால் மற்றப் பகுதிகளிலிருந்து அவர்களைக் களமிறக்கித் தேர்தலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ள அவ்வாறு செய்கிறதா என்று திரிணாமூல் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையம், ஆளும் பாஜகவுக்கு ‘சேவை’ செய்யும் அமைப்பா என்றும் அது கேள்வி எழுப்பியது.

குறிப்புச் சொற்கள்