புதுடெல்லி: கடந்த 2014-15 முதல் 2019-20 வரைப்பட்ட காலகட்டத்தை ஒப்புநோக்க, சென்ற 2021-22ஆம் ஆண்டுமுதல் இந்தியாவில் ரயில்களில் முன்பதிவு தேவையில்லாத பெட்டிகள் மூலமாகப் பயணம் செய்வோர் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளது.
மாறாக, கொவிட்-19 தொற்றுப் பரவலுக்குப்பின் முன்பதிவுப் பெட்டிகளில் பயணம் செய்வோர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்த மூத்த ரயில்வே ஊழியர் ஒருவர், “நடுத்தர வருமானம் ஈட்டுவோரிடையே கட்டணம் செலுத்தும் ஆற்றல் மேம்பட்டுள்ளது. அதனால் முன்பதிவுப் பெட்டிகளில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது,” என்றார்.
கடந்த 2021-22ஆம் ஆண்டில் 772 மில்லியன் பேர் முன்பதிவுப் பெட்டிகளில் செல்ல பயணச்சீட்டு வாங்கினர். இந்த எண்ணிக்கை 2022-23ஆம் ஆண்டில் 779 மில்லியனாகவும் 2023-24ஆம் ஆண்டில் 771 மில்லியனாகவும் இருந்தது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
2014-15ஆம் ஆண்டில் 488 மில்லியனாக இருந்த முன்பதிவுப் பெட்டிப் பயணிகளின் எண்ணிக்கை, 2024-25ஆம் ஆண்டில் 807 மில்லியனாக உயர்ந்துவிட்டது என்று அதிகாரத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், முன்பதிவு தேவையில்லாப் பெட்டிகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
கடந்த 2014-15ஆம் ஆண்டு முதல் 2019-20ஆம் ஆண்டுவரை புறநகர் அல்லாத பகுதிகளுக்கு முன்பதிவு தேவையில்லாத பெட்டிகள் மூலமாகப் பயணம் செய்தோர் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது.
ஆயினும், கொவிட்-19 பரவல் காரணமாக 2020-21ஆம் ஆண்டில் புறநகர் அல்லாத பகுதிகளுக்கு முன்பதிவற்ற 76 மில்லியன் பயணச்சீட்டுகள் மட்டுமே விற்கப்பட்டன. அதன்பின் அந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, 2024-25ஆம் ஆண்டில் 2,360 மில்லியனை எட்டியது.