ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட ரூ.7 கோடி ரொக்கம் கொள்ளை

2 mins read
b1992b73-e8b4-4b2b-9a48-cbdee69d3e7f
இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போன்று நாடகமாடி கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். - படம்: ஊடகம்

பெங்களூரு: ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்புவதற்காக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.7 கோடி ரொக்கப்பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெங்களூரில் நிகழ்ந்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போன்று நாடகமாடி கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.

பெங்களூரு ஜெபி நகர்ப் பகுதியில் இயங்கி வரும் தனியார் வங்கிக் கிளையில் இருந்து கோடிக்கணக்கான ரூபாயுடன் அதன் ஏடிஎம் மையத்துக்கு வழக்கம்போல் ஒரு வாகனம் புறப்பட்டுச் சென்றது. அதில் அந்த வங்கியின் ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்புவதற்காக ரூ.7 கோடி ரொக்கப்பணம் கொண்டு செல்லப்பட்டது.

அசோக் பில்லர் பகுதியை அந்த வாகனம் அடைந்தபோது, திடீரென சொகுசுக் காரில் வந்த சிலர் அந்த வாகனத்தை மறித்தனர்.

பின்னர் இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த மர்ம நபர்கள், அந்த வாகனத்தில் இருந்த ஊழியர் ஒருவரை மிரட்டி, ரூ.7 கோடி பணத்துடன் அவரையும் தங்கள் காரில் ஏற்றிக்கொண்டனர்.

சிறிது தூரம் சென்ற பிறகு அந்த ஊழியரை மட்டும் ஒரு பாலத்தின் அருகே இறக்கிவிட்ட கொள்ளையர்கள், அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

தகவல் அறிந்த காவல்துறையினர், உடனடியாக பெங்களூரு எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளுக்குத் தகவல் தெரிவித்து, தேடுதல் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில், கொள்ளையர்களின் வாகனம் பன்னார்கட்டா சாலை வழியே சென்றது தெரியவந்துள்ளது. மேலும், கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளைக் கைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பட்டப்பகலில் நிகழ்ந்த இந்தக் கொள்ளைச் சம்பவம் பெங்களூருவாசிகள் இடையே பேசுபொருள் ஆகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்