புதுடெல்லி: இந்திய அதிபர் திரௌபதி முர்மு, நாட்டின் மேம்பட்ட ரஃபேல் போர் விமானத்தில் திங்கட்கிழமை (29 அக்டோபர்) ஹரியானாவின் அம்பாலா விமானப் படை தளத்தில் முதல்முறையாகப் பறந்தார்.
ரஃபேல் விமானத்தில் பயணித்ததன் மூலம், இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியாக விமானப் படையை அவர் கௌரவித்துள்ளார்.
இந்திய விமானப் படையில் கடந்த 2020ல் இணைக்கப்பட்ட பிரெஞ்சு தயாரிப்பான ரஃபேல் விமானங்களில் தற்போது 36 விமானங்கள் செயல்பாட்டில் உள்ளன. மேலும் 26 விமானங்கள் இந்திய கடற்படைக்குக் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ‘ஆபபரேஷன் சிந்தூர்’ ராணுவத் தாக்குதல் நடவடிக்கையில் ரஃபேல் விமானங்கள் முக்கியப் பங்காற்றின.
இதற்குமுன் அதிபர் முர்மு 2023ஆம் ஆண்டு சுகோய்-30 போர் விமானத்திலும் பறந்துள்ளார். முன்னாள் அதிபர்கள் அப்துல் கலாம், பிரதீபா பாட்டீல் ஆகியோரும் சுகோய்-30 விமானத்தில் பறந்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

