தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குறைவான சாலைக் கட்டணம் உள்ள பாதைகளைப் பரிந்துரைக்க ஏற்பாடு

2 mins read
4a3615af-9095-4563-bbdf-22f50d590e9e
ராஜ்மார்கியாத்ராவில் புதிய அம்சத்தைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. - படம்: voices.shortpedia.com / இணையம்

புதுடெல்லி: சாலைக் கட்டணம் குறைவாக இருக்கும் மாற்று வழிகளை ஓட்டுநர்களுக்குப் பரிந்துரைக்கும் சேவையை வழங்க இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ‘கூகல் மேப்ஸ்’ வரைபடத்துடன் இணைந்து செயல்படுகிறது.

இச்சேவையை வழங்கும் புதிய அம்சத்தைத் தனது ராஜ்மார்கியாத்ரா கைப்பேசிச் செயலியில் அறிமுகப்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. இச்சேவை பல்வேறு பாதைகளைப் பரிந்துரைப்பதுடன் சாலைக் கட்டணம் குறைவாக இருக்கும் மாற்றுப் பாதைகளையும் பரிந்துரைக்கும்.

அடுத்த மாதம் முதல் இச்சேவை நடப்புக்கு வரும். பயண நேரத்தைக் குறைத்துக்கொள்ளவோ குறைவான சாலைக் கட்டணம் செலுத்தவோ எண்ணம் கொண்டுள்ள பயணிகள் புதிய அம்சத்தின் மூலம் தாங்கள் விரும்பிய பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

“டெல்லியிருந்து ஆக்ரா செல்ல ஆகச் சிறந்த இரண்டு பாதைகள் உள்ளன. யமுனா நெடுஞ்சாலை அல்லது தேசிய நெடுஞ்சாலை 44 (மதுரா ரோட்) வழி போகலாம். எந்தப் பாதையில் சாலைக் கட்டணம் குறைவாக இருக்கும் என்பதை செயலி தெரியப்படுத்தும்,” என்று அதிகாரிகள் உதாரணத்துடன் விளக்கினர் என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்தது.

கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி ராஜ்மார்கியாத்ரா செயலி, கூகல் பிளே ஸ்டோர் தளத்தில் 12,000 கருத்துகளுடன் 4.4 நட்சத்திரங்களைப் பெற்றுள்ளதாக இந்தியாவின் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை அமைச்சு தெரிவித்தது. ராஜ்மார்கியாத்ரா, கூகல் பிளே ஸ்டோரில் 348,000 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆப்பிள் ஸ்டோர் தளத்தில் 74,000க்கும் அதிகமானோர் அதைப் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்மார்கியாத்ரா செயலி, சுமார் ஈராண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. மக்களின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் நோக்குடன் அது உருவாக்கப்பட்டது.

உடனடி வானிலைத் தகவல்கள், அருகில் இருக்கும் மருத்துவமனைகள், ஹோட்டல்கள், பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்களை ராஜ்மார்கியாத்ரா தெரிவிக்கும்.

குறிப்புச் சொற்கள்