கொச்சி: கன்னியாகுமரியில் அசாம் செல்லும் விரைவு ரயிலில் இளைஞர் ஒருவர் ஏறினார். அப்போது, நீண்ட நேரம் ரயிலுக்காகக் காத்திருந்த களைப்பாலும் தூக்கத்தாலும் தன்னையறியாமல் வழக்கம்போல் கொட்டாவி விட்டார்.
கொட்டாவி விட்டதும் பின்னர் வாயை மூட முயற்சி செய்தும் அவரால் முடியவில்லை. உதவிக்கு யாரையாவது கூப்பிடலாம் என்று பார்த்தாலும் பேச முடியவில்லை.
வாயை மூட முடியாமல் அந்த இளைஞர் சிரமப்படுவதை அறிந்த சக பயணிகள், அது குறித்து ரயில் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து பாலக்காடு ரயில்வே மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி பி.எஸ்.ஜிதன் விரைந்து வந்து, சம்பந்தப்பட்ட இளையருக்கு உடனடி சிகிச்சை அளித்தார். இதையடுத்து அந்த இளைஞரால் வாயை மூட முடிந்தது. பின்னர் அவர், இயல்புநிலைக்கு திரும்பினார்.


