பிலாஸ்பூர்: இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதிக்கொண்டதில் 11 பேர் மாண்டுபோயினர்.
பிலாஸ்பூர் ரயில் நிலையத்திற்கு அருகே செவ்வாய்க்கிழமை (நவம்பர் 4) மாலை 4 மணியளவில் இவ்விபத்து நேர்ந்தது.
அண்டை மாவட்டமான கோர்பாவின் கெவ்ராவிலிருந்து பிலாஸ்பூர் நோக்கி அந்தப் பயணிகள் ரயில் சென்றுகொண்டிருந்தது.
இவ்விபத்தில் மேலும் 20 பேர் காயமுற்றதாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
விபத்தைத் தொடர்ந்து, உடனடியாக மீட்பு, துயர்துடைப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, அருகிலிருந்த மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
மோதிய வேகத்தில் பயணிகள் ரயிலின் ஒரு பெட்டி, சரக்கு ரயிலின்மீது ஏறி நின்றதைப் படங்கள் காட்டின.
“சிவப்பு விளக்கு ஒளிர்ந்தபோதும், அதனை மீறி 60-70 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற பயணிகள் ரயில், சரக்கு ரயில்மீது மோதியது,” என்று ரயில்வே உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன், “பயணிகள் ரயிலின் ஓட்டுநர் எதற்காகச் சிவப்பு விளக்கை மீறிச் சென்றார் என்பது குறித்தும் கண்ணுக்கெட்டிய தொலைவில் சரக்கு ரயில் இருப்பது தெரிந்திருந்தும் அவசரகால நிறுத்துகருவியை அவர் இயக்காதது ஏன் என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது,” என்றும் அந்த அதிகாரி சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
பயணிகள் ரயிலின் ஓட்டுநர் வித்யாசாகரும் விபத்தில் இறந்துவிட்டார்; துணை ஓட்டுநர் ராஷ்மி ராஜ் படுகாயமடைந்தார்.
பயணிகள் ரயிலானது சரக்கு ரயிலின் பின்புறமாக மோதிய நிலையில், அதன் கடைசிப் பெட்டியில் இருந்த சரக்கு மேலாளர் உடனடியாகக் கீழே குதித்துவிட்டார். அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதனிடையே, விபத்தில் மாண்டவர்களின் குடும்பத்தினர்க்கு ரூ.10 லட்சமும், கடுமையாகக் காயமுற்றோருக்கு ரூ.5 லட்சமும், லேசாகக் காயமடைந்தோர்க்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
விபத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து உறுதிப்படுத்தவும் எதிர்காலத்தில் இவ்வாறு நேராமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கவும் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மட்டத்தில் விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாயும் விபத்தில் மாண்டோர்க்கு இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தார்க்கு 5 லட்ச ரூபாயும் காயமுற்றோர்க்கு 50,000 ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

