சிந்து நதிநீர் தொடர்பான இருதரப்பு ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறிவிட்டது: இந்தியா

2 mins read
4ee45321-c37f-4e81-9ce6-84c42ffff905
அமைச்சர் மான்சுக் மாண்டவியா. - படம்: ஊடகம்

தோஹா: ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகும்கூட இந்தியாவிற்கு எதிராக தவறான தகவல்களைப் பாகிஸ்தான் பரப்பி வருவதாக இந்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் சமூக வளர்ச்சியில் கவனம் செலுத்துவதிலிருந்து உலகத்தை திசைதிருப்ப அனைத்துலக மன்றத்தை பாகிஸ்தான் தவறாகப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கத்தார் தலைநகர் தோஹாவில் இரண்டாவது உலக சமூக மேம்பாட்டு உச்ச நிலை மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்தியாவைப் பிரதிநிதித்து உரையாற்றிய திரு மாண்டவியா, இந்தியா குறித்து பாகிஸ்தான் பிரதமர் கூறி வரும் கருத்துகள் நியாமற்றவை என்றும் அவர் கூறுவதை ஏற்க இயலாது என்றும் கண்டனம் தெரிவித்தார்.

சிந்து நதிநீர் தொடர்பான இருதரப்பு ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறிவிட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

“இந்தியா எப்போதும் சட்டத்துக்கு உட்பட்டு திட்டங்களைச் செயல்படுத்துகிறது. ஆனால், பாகிஸ்தான் மட்டுமே தொடர்ந்து விரோதம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை சிறுமைப்படுத்தியுள்ளது,” என்றார் அவர்.

அண்டை நாடுகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களைப் பாகிஸ்தான் முறையாகக் கடைப்பிடிப்பதில்லை என்றும் ஒப்பந்த வழிமுறைகளைத் தொடர்ந்து தவறாக மட்டுமே பயன்படுத்தி வருகிறது என்றும் திரு மாண்டவியா குற்றஞ்சாட்டினார்.

“இந்திய நாட்டின் உள் விவகாரங்கள் குறித்து பேச பாகிஸ்தானுக்கு எந்தவித உரிமையும் இல்லை. இந்தியாவுக்கும் அதன் குடிமக்களுக்கும் எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அந்நாடு ஊக்குவிக்கிறது. இத்தகையச் செயல்களில் ஈடுபடும் ஒரு நாடு, இந்தியா பற்றி ​​கருத்து தெரிவிக்கக் கூடாது.

“வளர்ச்சி தொடர்பாக பாகிஸ்தான் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட இந்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர், இது தொடர்பாக பாகிஸ்தான் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

வறுமை ஒழிப்பு, சமூகப் பாதுகாப்பு முன்னேற்றத்தில் இந்தியா வெகுவாக முன்னேறி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் வளர்ச்சிப் பாதை உலகளாவிய தெற்கிற்கு ஒரு முன்மாதிரியாக விளங்குவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்