பாட்னா: லாலு பிரசாத் யாதவும் தேசிய ஜனநாயக கூட்டணியும் பீகாரில் செயல்படுத்தி வரும் அரசியல் அடிமைத்தனப் போக்கை ஒழிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது என ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
பீகாரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது இரண்டு கட்டங்களாக வேட்பு மனுதாக்கல் முடிந்துள்ள நிலையில், கூட்டணி அமைப்பதில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுமே பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன. யாருடனும் கூட்டணி இல்லை என அறிவித்து தனித்துக் களம்காண்கிறார் பிரசாந்த் கிஷோர்.
இந்நிலையில், பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது ஜன் சுராஜ் கட்சியைக் கண்டு பாஜக அஞ்சுவதாகக் குறிப்பிட்டார்.
“கடந்த சில ஆண்டுகளாக எந்த மாநிலத்தில் தேர்தல் நடந்தாலும், யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து பாஜக கவலைப்படுவதில்லை. ஒரு காலத்தில் ஜன் சுராஜ் என்ற கட்சி இருப்பதையே ஏற்றுக்கொள்ளாத பாஜக, இப்போது எங்களைக் கண்டுதான் மிக அதிகமாக அஞ்சுகிறது.
“மகாகத்பந்தன் கூட்டணி என்பது மக்கள் மத்தியில் பீதியை உருவாக்குவதற்கான கூட்டணி. தற்போது மக்கள் முடிவு செய்வதற்கு சில வழிகள் உருவாகி உள்ளன. குறிப்பாக, பீகாரில் அரசியல் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான வாய்ப்பு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் மூலம் உருவாகியுள்ளது.
“பல தொகுதிகளில் எங்கள் கட்சி வேட்பாளர்களை வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் தடுத்துள்ளனர். கடந்த சில நாள்களில் ஏற்கெனவே வேட்புமனு தாக்கல் செய்தவர்களை அதை திரும்பப் பெறுமாறும் கட்டாயப்படுத்தி உள்ளனர்.
“எனவே, வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்று நாள் பயணமாக பீகார் செல்கிறார். அங்கு சரண் மாவட்டத்தில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பேரணியில் பங்கேற்க உள்ள அவர், பல்வேறு முக்கியப் பேராளர்களையும் சந்திக்க உள்ளார்.
பீகார் மாநில பாஜக தனது தலைமையிலான கூட்டணியை வலுப்படுத்துவது குறித்து அவர் ஆலோசனை நடத்துவார் என்று மாநில பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.