புதுடெல்லி: இந்தியா முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களில் பெரும்பாலானோர் கணக்குப் பாடத்தில், குறைந்த மதிப்பெண் பெற்று வருவது அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மத்திய, மாநில அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயிலும் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 53 விழுக்காட்டினக்கு மட்டுமே 10ம் வாய்ப்பாடு வரை தவறின்றிச் சொல்லும் திறன் உள்ளது என்றும்; மத்திய அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவர்கள் கணக்குப் பாடத்தில் குறைந்த திறனுடன் உள்ளனர் என்றும் மத்திய கல்வி அமைச்சு மேற்கொண்ட அந்த ஆய்வு சுட்டியது.
நாடு முழுதும் உள்ள 3, 6, 9ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வித்திறன் குறித்து, இந்தியக் கல்வி அமைச்சு 2024 டிசம்பர் மாதம் மேற்கொண்ட ஆய்வில், மொத்தம் 74,229 அரசு, தனியார் பள்ளிகள் பங்கேற்றன. ஏறக்குறைய 21 லட்சம் மாணவர்கள் ஆய்வில் பங்கேற்றனர். மேலும், 2.70 லட்சம் ஆசிரியர்களிடம் கருத்துகள் பெறப்பட்டன.
36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 781 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இதில், 3ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 55% பேர் மட்டுமே ஒன்று முதல் 99 வரை, ஏறு, இறங்கு வரிசையில் எண்களை வரிசைப்படுத்தும் திறன் பெற்றுள்ளனர். 58% மாணவர்கள் மட்டுமே இரண்டு இலக்க கூட்டல், கழித்தல் கணக்குகளைச் சரியாகப் போடும் திறன் பெற்றுள்ளனர்.
மத்திய அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் சிறப்பான திறனை வெளிப்படுத்தினர். குறிப்பாக, மொழிப் பாடத்தில் சிறந்து விளங்குகின்றனர். தனியார் பள்ளி மாணவர்கள் அறிவியல், சமூக அறிவியலில் சிறந்து விளங்கினாலும் கணிதத்தில் குறைந்த மதிப்பெண் பெறுகின்றனர் என்று ஆய்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

