குவஹாத்தியில் பச்சிளம் குழந்தை தவறி விழுந்ததால் தாதி கைது

2 mins read
cb165ea9-e317-41ab-bd8f-6404ba518b6d
குழந்தை தவறி விழுந்தபோது பணியில் இருந்த தாதி பொறுப்பாளர் என்று கூறப்படுகிறது. - கோப்புப் படம்: ஊடகம்

குவஹாத்தி: குவஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை ஒன்று ஒளிக்கதிர் சிகிச்சை படுக்கையில் இருந்து தவறி விழுந்து இறந்ததால் அப்போது பணியில் இருந்த தாதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் நோக்கமில்லா மரணம் விளைவித்த குற்றச்சாட்டை அந்த தாதி எதிர்நோக்குகிறார்.

அசாமின் ஆகப் பெரிய அரசாங்க மருத்துவமனையில் ஆகஸ்ட் 18ஆம் தேதி மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒளிக்கதிர் படுக்கையில் வைக்கப்பட்டிருந்த குழந்தை விழுந்து இறந்துவிட்டது.

இது தொடர்பாக விளக்கமளித்த குவஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வரான டாக்டர் அச்யுட் சந்திரா பைஷ்யா, பணியில் இருந்த தாதி குழந்தைகளுக்கு பால் ஏற்பாடு செய்வதற்காக மற்றோர் அறையில் இருந்தார் என்றார்.

ஒளிக்கதிர் படுக்கையிலிருந்து கீழே விழுந்த மற்றொரு குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. அந்தக் குழந்தை நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

“சம்பவம் நடந்த அன்று குழந்தைகள் இருந்த அறைக்கு அந்த தாதிதான் பொறுப்பாக இருந்துள்ளார். குழந்தையைக் கவனிக்காமல் அறையைவிட்டுச் சென்றுள்ளார். நாங்கள் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்,” என்று இண்டியன் எக்ஸ்பிரசிடம் திரு அச்யுட் சந்திரா பைஷ்யா தெரிவித்துள்ளார்.

ஒளிக்கதிர் சிகிக்சை அறையில் மொத்தம் 35 குழந்தைகள் இருந்தன. போதுமான ஊழியர்கள் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள இருந்தார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

சம்பவத்தைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளார்.

தவறி விழுந்த குழந்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி பிறந்தது. குவஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் ( NICU) மஞ்சள் காமாலைக்காக குழந்தைக்கு ஒளிக்கதிர் சிகிச்சை அளிக்கப்பட்டது. படுக்கையில் இருந்து விழுந்தபோது, ​​அதில் இணைக்கப்பட்ட கம்பிகள் குழந்தையின் கழுத்தை நெரித்து உயிரிழந்தது. குழந்தையின் மரணத்திற்கு மருத்துவமனையே காரணம் என்று தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்