தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உறவில் புதிய சிக்கல்கள் வேண்டாம்: சீனாவிடம் ராஜ்நாத் சிங்

2 mins read
6dd2e129-6e2e-41a9-b004-b9108949f1aa
பீகார் மாநிலத்திலிருந்து வந்த ஓவியம் ஒன்றை சீனத் தற்காப்பு அமைச்சர் டோன் ஜுவானிடம் (வலது) வழங்கும் இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங். - படம்: newsarenaindia.com / இணையம்

சிங்டாவ்: இந்தியாவும் சீனாவும் தங்களுக்கிடையிலான இருதரப்பு உறவில் காணப்பட்டுவரும் நேர்மறையான  மேம்பாடுகளைத் தொடரவேண்டும் என்று இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீனத் தற்காப்பு அமைச்சர் டோங் ஜுன்னிடம் கூறியுள்ளார்.

இருதரப்பு உறவில் புதிய சிக்கல்கள் தலைதூக்குவதைத் தவிர்க்கவேண்டும் என்று திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தியிருப்பதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

‌ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பைச் (SCO) சேர்ந்த தற்காப்பு அமைச்சர்கள் சீனாவின் கடற்கரை நகரான சிங்டாவில் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினர். அப்போது திரு சிங், திரு டோனுடன் வியாழக்கிழமை (ஜூன் 26) ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லடாக் யூனியன் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள எல்லைக் கோட்டுப் பகுதியில் (எல்ஏசி) ராணுவப் பூசலை நிறுத்திக்கொள்ள இருநாடுகளும் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் ஒப்புக்கொண்டன. அதனைத் தொடர்ந்து புதுடெல்லியும் பெய்ஜிங்கும் தங்களுக்கு இடையிலான உறவை மீண்டும் வளர்த்துக்கொள்ளும் முயற்சிகளை எடுத்துவரும் வேளையில் திரு சிங்கின் சீனப் பயணம் இடம்பெற்றுள்ளது.

“இருதரப்பு உறவு குறித்த விவகாரங்களின் தொடர்பில் நாங்கள் ஆக்கபூர்வமான, முற்போக்குச் சிந்தனைகொண்ட கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம்,” என்று திரு சிங் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

“கைலாச மானசரோவர் யாத்திரை கிட்டத்தட்ட ஆறாண்டு கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடத்தப்படுவதற்கு நான் மகிழ்ச்சி தெரிவித்துக்கொண்டேன்,” என்றார் அவர்.

“புதிய சிக்கல்கள் ஏற்படாமல் பார்த்துக்கொண்டு இருதரப்பு உறவு மேம்பட்டுவருவதைத் தொடர்வதே இருநாடுகளின் எண்ணமாக இருந்துவருகிறது,” என்றும் திரு சிங் குறிப்பிட்டார்.

திரு சிங், திரு டோனுக்கு ‘மதுபானி’ (Madhubani) ஓவியம் ஒன்றையும் அன்பளிப்பாக வழங்கினார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த ஓவியம், ஞானம், வலிமை ஆகியவற்றைச் சித்திரிப்பதாகக் கூறப்படுகிறது.

‘மதுபானி’ ஓவியம், இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள மிதிலா பகுதியில் தோன்றியது.

குறிப்புச் சொற்கள்