புதிய உலகளாவிய நெருக்கடிகளைச் சமாளிக்க புதிய ஐநா தேவை: ராஜ்நாத் சிங்

2 mins read
1169e066-d750-4bdb-ad8c-033bc3695151
ராஜ்நாத் சிங். - படம்: ஊடகம்

புதுடெல்லி: இப்போதைய உலகச் சூழலில் இந்தியாவின் நாகரிக அணுகுமுறையில் இருந்து அனைத்துலக நாடுகள் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது என்று அந்நாட்டின் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா எப்போதும் அனைத்துலகச் சட்டங்களை மதித்துச் செயல்படுவதாக உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற, உலக தலைமை நீதிபதிகளுக்கான அனைத்துலக மாநாட்டில் உரையாற்றும்போது அவர் குறிப்பிட்டார்.

உலகளாவிய மோதல்களைச் சமாளிக்க உலகிற்கு புதிய மாற்றங்களுடன் கூடிய ஐக்கிய நாட்டு நிறுவனம் தேவை என்று திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். உலக நாடுகளிடையே ஒருமித்த கருத்துடன் கூடிய செயல்பாடு தேவை என்றும் அவர் சொன்னார்.

இஸ்ரேல், ஹமாஸ் மோதலின் போதும், உக்ரேன்-ரஷ்யா நெருக்கடியின் போதும், வேறு பல உலகளாவிய மனிதாபிமான நெருக்கடிகளிலும் ஐநா மிகவும் தன் வலுவான பங்கை ஆற்ற முடியாமல் போனதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனவேதான் உலகளாவிய மோதல்களைச் சமாளிக்க உலகிற்கு புதிய ஐக்கிய நாட்டு நிறுவனம் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

“பல்வேறு காரணிகளால் ஐநாவின் அதிகாரம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. அனைத்துலக அமைப்பை உயிர்ப்புடன் வைத்திருக்க ஐநாவில் சமநிலையான பிரதிநிதித்துவம் காலத்தின் தேவை. அப்போதுதான் இன்றுள்ள நிலைமையை மாற்ற முடியும்,” என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் மேலும் கூறினார்.

நீதி என்பது வெறும் விதியன்று, அது ஒரு சமயம் என்று குறிப்பிட்ட அவர், அமைதி என்பது வெறும் கொள்கை அல்ல, அது ஒரு பாரம்பரியம் என்றார்.

உலகளாவிய நல்லிணக்கம் வெறும் அரச தந்திரமன்று, அது ஒரு கலாசாரம் என்றும் இந்தியா அனைத்துலகச் சட்டத்தை மதித்து, பன்முகத்தன்மையை ஒரு மதிப்பாக ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் கூறினார்.

“உலகின் எந்தப் பகுதியிலும் நெருக்கடி ஏற்படும்போதெல்லாம், இந்தியா இதயத்தாலும் ஆன்மாவாலும் உதவ முன்வந்துள்ளது. இந்தியாவின் கொள்கை தெளிவாக உள்ளது,” என்றார் திரு ராஜ்நாத் சிங்.

குறிப்புச் சொற்கள்