மும்பை: புறாக்களைப் பாதுகாக்கும் ஒரே நோக்கத்துடன் மகாராஷ்டிர மாநிலத்தில் புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.
புறா சின்னத்துடன், ‘சாந்தி தூத் ஜன்கல்யாண்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட அந்தக் கட்சி ஜெயின் சமூகத்தினரின் நலன்களைக் காப்பதற்கு மட்டுமல்லாமல் விலங்குகள் நல உரிமைக்காகவும் போராடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை மாநகராட்சிக்கு, பல்வேறு சிக்கல்கள் காரணமாக கடந்த 2017 முதல் தேர்தல் நடத்தப்படவில்லை. ஏறக்குறைய 74,000 கோடி ரூபாய் வரவு செலவுத் திட்டம் கொண்ட இந்நிர்வாகத்தின் பொறுப்பில், தற்போது எந்த அரசியல் கட்சிகளும் இல்லை. மாநில அரசு அதிகாரிகள்தான் முழு நிர்வாகத்தையும் கவனித்து வருகிறார்கள்.
இந்நிலையில், புறாக்கள் விவகாரத்தால் மகாராஷ்டிர அரசியல் கட்சிகளுக்குப் புதுத்தொல்லை முளைத்துள்ளது.
மும்பையின் தாதர் புறநகர்ப் பகுதியில் புறாவுக்கென்றே தனி இடம் இருக்கிறது. நாள்தோறும் அங்கு ஆயிரக்கணக்கான புறாக்கள் கூடும். அங்கு வரும் பொதுமக்கள், சுற்றுப் பயணிகள் உள்ளிட்ட ஏராளமானோர் அவற்றுக்கு உணவும் நீரும் கொடுப்பது வழக்கம். இவர்களில் ஜெயின் சமூகத்தினரின் எண்ணிக்கையே அதிகம்.
எனினும், புறாக்களால் சில பாதிப்புகள் ஏற்படும் என்ற காரணத்தை முன்வைத்து அவற்றுக்கு உணவளித்துப் பராமரிக்க மும்பை மாநகராட்சி கடந்த ஜூலையில் தடைவிதிக்கவே, ஜெயின் சமூகத்தினர் கடும் அதிருப்தியும் வருத்தமும் அடைந்தனர். ஆனால் தடையை உடைக்க முடியவில்லை.
இதையடுத்து, பல்வேறு ஆலோசனைக்குப் பின்னர் தங்களுக்கெனத் தனியாக அரசியல் கட்சியைத் தொடங்கிவிட்டனர்.
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜெயின் மக்கள் அதிக அளவில் வசிப்பதால், உள்ளாட்சித் தேர்தல் வந்தால் அக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறக்கூடும். இதனால் பிற கட்சிகள் கலக்கத்தில் உள்ளன.