சென்னை: அரபிக்கடல், வங்கக்கடல் என ஒரே நேரத்தில் இரு கடற்பகுதிகளிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக மாறும் என்றும் பின்னர் ஆந்திராவை நோக்கி நகரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது சென்னைக்கு தென்கிழக்கே ஏறக்குறைய ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது.
அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரம் அடையும். இது பின்னர் வடமேற்குத் திசையில் நகர்ந்து, ஆந்திராவை நோக்கி நகரும்போது தமிழகம், புதுவை, காரைக்காலில் மழைக்கு வாய்ப்புள்ளது.
இதையடுத்து வரும் 27ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில், கனமழை முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் இந்த மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்படுகிறது என்றும் வானிலை ஆய்வு நிலையம் கூறியுள்ளது.
குறிப்பாக, சென்னையில் புயலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்றும் மூன்று நாள்களுக்கு மழை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், புயலை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளையும் சென்னை மாநகரம் தயார்நிலையில் இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ‘மோந்தா’ புயல் ஆந்திராவின் மசூலிப்பட்டினம்-கலிங்கப்பட்டினம் இடையே தீவிரப் புயலாக கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
எனினும், தற்போது புயல் சின்னமானது, சென்னையில் 1970 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

