சாகர்: மத்தியப் பிரதேசத்தின் சாகர் நகரில் பணியாற்றும்படி அனுப்பப்பட்ட ராணுவ அதிகாரியை இரண்டு நாள்களாகக் காணவில்லை என்று காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
காணாமற்போன லெஃப்டெணன்ட் கர்னல் பரதீப் குமார் நிகாம், இரண்டு நாள்களுக்கு முன் காலை நடைப்பயிற்சிக்காக வீட்டிலிருந்து புறப்பட்டார்.
அவர் குவாலியர் பகுதியின் குடியிருப்பாளர் என்றும் தற்போது சாகரில் உள்ள மகார் படைப்பிரிவு நிலையத்திற்கு மாற்றப்பட்டார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை காலை 6.30 மணியளவில் நடைப்பயிற்சிக்காக வீட்டைவிட்டு வெளியேறிய லெஃப்டெணன்ட் கர்னல் பரதீப், மீண்டும் வீடு திரும்பவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
காணாமற்போன லெஃப்டெணன்ட் கர்னல் பரதீப்பை ராணுவப் படையினர் முதலில் தேடினர் என்றும் அவர் கிடைக்காததை அடுத்து கெண்டன்மண்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது என்றும் துணைக் காவல்துறைக் கண்காணிப்பாளர் லோக்கேஷ் சின்ஹா கூறினார்.
முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது என்ற அவர், கூடுதல் விசாரணைகள் நடைபெறுவதாகச் சொன்னார்.
“காவல்துறையும் ராணுவமும் அவரை தேடுகிறது. ஏதாகிலும் குறிப்பு கிடைக்குமா என்று கண்காணிப்புக் கேமராக்களையும் ஆராய்கிறோம்,” என்று திரு சின்ஹா கூறினார்.
விசாரணையின் ஒரு பகுதியாக காணாமற்போன அதிகாரியின் குடும்ப உறுப்பினர்களும் விசாரிக்கப்படுகின்றனர்.

