மும்பை: எல்லை தாண்டிய பணப் பரிமாற்றங்களை எளிதாகவும் துரிதமாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்ற ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான வரைவு வழிகாட்டுதல்களை அந்த வங்கி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது: பணப்பரிமாற்றத்தின் செயல் திறனை மேம்படுத்துவதையும், ஜி20 திட்டத்துடன் இணைப்பதையும் இலக்காக வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் வெளிநாட்டில் வாழும் இந்திய நாட்டவர்கள், தாயகத்தில் உள்ள தங்களின் உறவினர்களுக்குப் பணம் அனுப்புவது எளிதாகும்.
இதுகுறித்து 2025, நவம்பர் 19க்குள் வங்கிகளிடமிருந்து அதன் திட்டங்கள் மற்றும் கருத்துகளை ரிசர்வ் வங்கி வரவேற்பதாகத் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நடைபெறும் பணப்பரிமாற்றங்களின் செயல்திறனை வேகமாகவும் வெளிப்படையாகவும் அதிகம் அணுகக்கூடியதாகவும் மாற்ற வேண்டும்.
பணப் பரிமாற்றங்களின் வேகத்தைப் பாதிக்கும் பல காரணிகள் உள்ளன. அதில் பயனாளியின் வங்கியில் பணம் பெறப்பட்டதிலிருந்து பயனாளியின் கணக்கில் வரவு வைக்கப்படுவது வரை எடுத்துக்கொள்ளும் நேரம் முக்கியமாகும்.
இந்நிலையில், பயனாளியின் வங்கியில் செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவது, பணம் செலுத்தும் தகவல் மற்றும் பயனாளியின் கணக்கில் வரவு வைக்கப்படுவது குறித்து சரியான நேரத்தில் தெரிவிப்பதை உறுதி செய்வது ஆகியவை சிறந்த தீர்வாக அமையும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

