பிஜ்னோர்: பாம்போடு படம் எடுக்க முயன்றவர், பாம்பு படமெடுத்துக் கொத்தியதால் இப்போது உயிருக்குப் போராடி வருகிறார்.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோகா மாவட்டத்தைச் சேர்ந்த ஹைபாத்பூர் எனும் சிற்றூரில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13) இச்சம்பவம் நிகழ்ந்தது.
ஜிதேந்திர குமார் என்ற அந்த விவசாயி, அப்பாம்பை மீட்டார். பின்னர் அதனுடன் அவர் ஒரு குறுங்காணொளி எடுக்க முயன்றார்.
ஜிதேந்தரின் அந்த அபாயமிக்க முயற்சியை அருகிலிருந்த பலர் தங்கள் காணொளிகளில் படம்பிடித்தனர். பாம்பை முத்தமிட முயன்ற அந்நேரத்தில் ஜிதேந்தர் போதையில் இருந்ததாகவும் புகைபிடித்ததாகவும் உள்ளூர்வாசிகள் கூறினர்.
அப்பாம்பைத் தமது கழுத்தில் போட்டுக்கொண்டு, ஜிதேந்தர் அதனைத் தம் வாயருகே கொண்டுசென்றார்.
பாம்பை நோக்கி ஜிதேந்தர் தமது நாக்கை நீட்டியதும், அது அவரது நாக்கிலேயே கொத்தியது. உடனடியாக அவரது உடல்நிலை மோசமடைய, அவர் விரைவாக அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
அங்கிருந்த மருத்துவர்கள் அவரை வேறு ஓர் உயர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும்படி அறிவுறுத்தினர்.
இச்சம்பவம் குறித்து ஜிதேந்தரின் குடும்பத்தினர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
ஜிதேந்தர் தற்போது மொராதாபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் ஊராட்சித் தலைவர் ஜெய்கீரத் சிங் கூறினார்.
பாம்பு கொத்தியதும் ஜிதேந்தரின் பிடி நழுவியதால், அப்பாம்பு அருகிலிருந்த புதருக்குள் சென்று மறைந்ததாகவும் அவர் சொன்னார்.