சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியின் மூத்த மகன் திரு மு.க.முத்து உடல்நலக் குறைவால் சனிக்கிழமை (ஜூலை 19) காலை மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூக்காரி, சமையல்காரன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானவர் திரு மு.க.முத்து, பிறகு அரசியலிலிருந்து விலகினார்.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதியுற்ற திரு மு.க.முத்து சனிக்கிழமை காலை 8 மணியளவில் உயிரிழந்ததாக அவரது மனைவி சிவகாம சுந்தரி தெரிவித்தார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து எம்ஜிஆர் விலகியதை அடுத்து, அவரைப் போலவே நடை, உடை, பாவனையோடு நடித்தவர் என்ற பெயரைத் திரு மு.க.முத்து கொண்டிருந்தார்.
பிள்ளையோ பிள்ளை, பூக்காரி, சமையல்காரன், அணையா விளக்கு, நம்பிக்கை நட்சத்திரம் என திரு மு.க.முத்து நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றிபெறாததைத் தொடர்ந்து திரைப்படத் துரையிலிருந்து அவர் விலகினார்.
திரு மு.க.முத்துவுக்கு அறிவுநிதி என்ற மகனும் தேன்மொழி என்ற மகளும் பிறந்தனர். இதற்கிடையே திரு கருணாநிதியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அரசியலில் இருந்தும் விலகிய திரு மு.க.முத்து எங்கே இருந்தார் என்பதே பலருக்கும் தெரியாமல் இருந்தது.
சென்னையில் வசித்து வந்த அவர், ஒருமுறை உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் திரு மு.க.முத்துவை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். சனிக்கிழமை காலை உயிரிழந்த திரு மு.க.முத்துவின் நல்லுடல் சென்னையில் உள்ள ஈச்சம்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்பட திராவிட முன்னேற்றக் கட்சி, திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் திரு மு.க.முத்துவுக்கு அஞ்சல் செலுத்தி வருகின்றனர்.

