பாட்னா: லாலு பிரசாத் யாதவின் இரண்டாவது மகளான ரோகிணி ஆச்சார்யா, அரசியலையும் தனது குடும்பத்தையும் விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.
அண்மையில் நடந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) கட்சி மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்தது.
2020 தேர்தலில் 75 தொகுதிகளில் வென்ற அக்கட்சி, இந்தத் தேர்தலில் வெறும் 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 243 தொகுதிகளில் 202 தொகுதிகளில் வெற்றி பெற்றுச் சாதனை படைத்துள்ளது.
தேர்தல் தோல்வியால் ராஷ்ட்ரிய ஜனதா தள தொண்டர்கள் சோர்வடைந்துள்ள நிலையில், கட்சியின் குடும்பத்திலும் பிரச்சினை வெடித்துள்ளது.
இதுதொடர்பாக ரோகிணி ஆச்சார்யா தனது எக்ஸ் தளத்தில், “நான் அரசியலையும் குடும்பத்தையும் விட்டு விலகுகிறேன். சஞ்சய் யாதவும் ரமீஸும் இதைத்தான் என்னிடம் கேட்டார்கள். எல்லா பழிகளையும் நான் ஏற்கிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.
சஞ்சய் யாதவ்ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மாநிலங்களவை உறுப்பினர். மேலும் தேஜஸ்வி யாதவின் நம்பிக்கைக்குரியவர். ரமீஸ் தேஜஸ்வி யாதவின் நீண்டகால நண்பர். இவர்கள் இருவரும் ரோகிணிக்கு என்ன சொன்னார்கள் என்பது குறித்து அவர் விரிவாகத் தெரிவிக்கவில்லை.
ரோகிணி ஆச்சார்யா எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற மருத்துவர். இவர் கணவர் சாம்ரேஷ் சிங் ஒரு மென்பொருள் பொறியாளர்.
தொடர்புடைய செய்திகள்
இவர்கள் சுமார் 20 ஆண்டுகளாக அமெரிக்காவிலும் சிங்கப்பூரிலும் வசிக்கிறார்கள்.
தந்தையின் உடல்நலக் குறைவின்போது, அவருக்குத் தன்னுடைய சிறுநீரகத்தை தானமாக அளித்துப் பெரும் பாராட்டைப் பெற்றவர் ரோகிணி ஆச்சார்யா என்பது குறிப்பிடத்தக்கது.

