புதுடெல்லி: கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளி அமீர் ரஷித் அலி கைது செய்யப்பட்டு உள்ளார்.
குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளர் அவர் என காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
நவம்பர் 10ஆம் தேதி டெல்லியில் வெடிபொருள் நிரப்பப்பட்ட கார் வெடித்துச் சிதறியது.
அந்தச் சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியைச் சேர்ந்த மருத்துவர் உமர் நபி, கார் குண்டு தாக்குதலை நடத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16) இரவு என்ஐஏ வெளியிட்ட அறிக்கையில், டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான அமீர் ரஷித் அலி கைது செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.
“டெல்லி குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட கார், இவரது பெயரில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஜம்முவின் சம்போரா பகுதியைச் சேர்ந்த அமீர் ரஷித் அலி டெல்லிக்கு வந்து ஐ20 காரை வாங்கி தனது பெயரில் பதிவு செய்துள்ளார். இந்த காரிலேயே வெடிபொருள்கள் நிரப்பப்பட்டு குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. இவருக்கும் மருத்துவர் உமர் நபிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
“வழக்கு தொடர்பாக இதுவரை 73 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளோம். இதே வழக்கு தொடர்பாக டெல்லி, ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தரப் பிரதேச காவல்துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்,” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லியைப் போன்று நாடு முழுவதும் கார்களைப் பயன்படுத்தி வெடிகுண்டு தாக்குதலை நடத்த ஜெய்ஷ் தீவிரவாத அமைப்பு சதித் திட்டம் தீட்டியிருந்தது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதைத் தொடர்ந்து டெல்லியில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
சந்தேகத்துக்கு உரிய 34 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

