வயது குறைந்தோரும் முன்பிணைக்குத் தகுதி: கோல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2 mins read
d693408e-96c2-486c-9ef4-4723ffa95b80
கோல்கத்தா உயர்நீதிமன்றம். - படம்: கோல்கத்தா உயர்நீதிமன்ற இணையத்தளம்

கோல்கத்தா: முன்பிணை பெறுவதற்குத் தகுதியான குற்றச் செயல்களைப் பொறுத்தவரை பெரியவர்களைவிட வயது குறைந்தோரும் இனி முன்பிணைக்குத் தகுதிபெறுவர் என்று கோல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மூவரைக் கொண்ட நீதிபதிகள் குழு வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) தீர்ப்பளித்தது.

ஜெய் செங்குப்தா, திர்த்தங்கர் கோ‌ஷ், பிவாஸ் பட்டனாயக் ஆகியோரைக் கொண்ட கோல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு இவ்வாறு தீர்ப்பளித்ததாக என்டிடிவி ஊடகம் தெரிவித்துள்ளது.

இதுவரை பெரியவர்கள் மட்டுமே முன்பிணைக்குத் தகுதிபெற்றிருந்தனர்.

இந்தத் தீர்ப்பு, சட்டத்துறை வட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இதுவரை சந்தேக நபர்களாக இருக்கும், வயது குறைந்தவர்களைப் பிணையில் விடுவிப்பது குறித்த முடிவுகளை அவர்களுக்கான நீதித்துறை வாரியம்தான் (Juvenile Justice Board) எடுத்து வந்தது.

ஆனால், குற்றஞ்சாட்டப்பட்ட வயது குறைந்தவர்களுக்கு முன்பிணை வழங்குவது குறித்து முடிவெடுக்க அந்த வாரியத்துக்கு அதிகாரம் இல்லாமலிருந்தது.

இந்த விவகாரத்தில் தீர்ப்பளித்த நீதிபதிக் குழுவில் மூவரும் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கவில்லை.

செங்குப்தா, கோ‌ஷ் இருவரும் வயது குறைந்தவர்களை முன்பிணைக்குத் தகுதிபெறச் செய்வதை ஆதரித்தனர். அதேவேளை, பட்டனாயக் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

நீதிபதிகள் குழுவில் பெரும்பாலானோர் ஆதரவளித்ததால் வயது குறைந்தவர்களுக்கு முன்பிணை வழங்கலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வயது குறைந்தவர்கள் இனி முன்பிணைக்கு விண்ணப்பிக்கலாம். அதனால் பெரியவர்களுக்கு வழங்கப்படும் முன்பிணை தொடர்பான உரிமைகள் இளம் வயதினருக்கும் வழங்கப்படும்.

மேலும், வயது குறைந்தவர்களுக்கான நீதி (பராமரிப்பு, சிறார் பாதுகாப்பு) சட்டம் (Juvenile Justice (Care and Protection of Children) Act), அத்தகையோர் கைது செய்யப்படுவதற்குப் பிறகு எடுக்கப்படும், சட்ட ரீதியான நடவடிக்கைகளை விவரிக்கிறது என்றும் கைதுக்கு முந்தைய சட்ட நடவடிக்கைகளை விவரிக்கவில்லை என்று மூவரைக் கொண்ட நீதிபதிகள் குழுவில் இருப்போரில் பெரும்பாலானோர் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்