திருவனந்தபுரம்: தன் காதலருக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டபோதும், அவரைத் திருமணம் செய்ய முன்வந்த பெண்ணை கேரள உயர் நீதிமன்றம் பாராட்டியது. மேலும், திருமணத்துக்காக அக்கைதியை 15 நாள் சிறை விடுப்பில் செல்ல அனுமதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த 29 வயதான பிரசாந்த் என்பவர், சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கொலை வழக்கில் கைதானார். விசாரணையின் முடிவில், திருச்சூர் நீதிமன்றம் இவருக்கு ஆயுள் தண்டனை விதித்ததையடுத்து, அங்குள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பின்னர், தன் காதலியைத் திருமணம் செய்ய தமக்கு அனுமதி வழங்கும்படி, சிறை நிர்வாகத்திற்கு பிரசாந்த் அளித்த மனு ஏற்கப்படவில்லை. இதனால் அவரது தாயார் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
மகனுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகவும் பிரசாந்தை சிறை விடுப்பில் செல்ல அனுமதிக்குமாறு கோரியும் அவர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி குன்ஹிகிருஷ்ணன், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியை, திருமணம் செய்ய முன்வந்த பெண்ணுக்காக அக்கைதி சிறை விடுப்பில் செல்ல தாம் அனுமதிப்பதாகக் குறிப்பிட்டார்.
“கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டும் தன் காதலைக் கைவிடாத பெண்ணைப் பாராட்டுகிறேன். அவரது இந்த உறுதியான நிலைப்பாட்டை நீதிமன்றத்தால் புறக்கணிக்க முடியாது.
“உறுதியான காதலுக்கு முன், எந்த தடைகளும் நிற்க முடியாது. அது எல்லைகளையும் சுவர்களையும் உடைத்து இலக்கை அடைகிறது எனப் பிரபல அமெரிக்க பெண் கவிஞர் மாயா ஆஞ்சலோ கவிதை எழுதியுள்ளார். அதை, இப்போது இங்கு நினைவு கூர்கிறேன்,” என்று நீதிபதி தமது உத்தரவில் மேலும் கூறியுள்ளார்.

