தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திமுக எதிர்க்கட்சியாக இருப்பதே விவசாயிகளுக்கு நல்லது: பி.ஆர்.பாண்டியன்

2 mins read
21b034ec-bd92-474d-aa9c-bf48b93f1758
திமுக எப்போதும் எதிர்க்கட்சியாக இருப்பதே விவசாயிகளுக்கு நல்லது என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மதுரை: திமுக எப்போதும் எதிர்க்கட்சியாக இருப்பதே விவசாயிகளுக்கு நல்லது என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய பி.ஆர். பாண்டியன் விளக்கமளித்தார்.

“கர்நாடகாவில் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு கீழே 500 அடி பள்ளத்தில் மேகதாது அணையைக் கட்ட திட்டமிட்டு பெங்களூருவுக்கு குடிநீர் என்ற பெயரில் தண்ணீரை அங்கே கொண்டு சென்றால் பாசனத்திற்கு தண்ணீர் குறைந்து விடும் என கர்நாடகாவின் காவிரி பாசன விவசாயிகள் மேகதாது அணைகட்ட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

“விவசாயிகள் ஆதரவு தெரிவிக்காத நிலையில் அங்கு காங்கிரசுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் இடையிலானப் போட்டியில் தங்களது எதிர்ப்பை காட்ட நினைத்த துணை முதல்வர் சிவக்குமார், மேகதாது அணை கட்டுவதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் மறுப்பு தெரிவிக்கவில்லை, பேசவும் இல்லை.

“உச்ச நீதிமன்ற உத்தரவில்லாமல் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது. கர்நாடகாவில் நடந்த கூட்டத்தில் தமிழக, கர்நாடக விவசாயிகள் கலந்து கொண்டு மேகதாது அணை கட்டினால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கிய பின் தமிழகத்தில் கிருஷ்ணகிரியில் ராசிமணல் பகுதியில் அணை கட்ட வேண்டும் என நாங்கள் வைத்த கோரிக்கையை கர்நாடக விவசாயிகள் ஏற்றுக் கொண்டனர்.

“மேகதாது அணையை பொறுத்தவரை ‘இது கர்நாடக அரசின் அரசியல் நாடகம்’ என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருக்க வேண்டும், எப்போதுமே பதில் சொல்வதில்லை. அ.திமு.க., ஆட்சிக் காலத்தில் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிய பின்பே, அணையிலிருந்து பாதுகாப்பிற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

“ஸ்டாலின் ஆட்சியில் தற்போது அணையில் 136 அடி தண்ணீர் வந்தவுடனேயே பாதுகாப்பு கருதி அணை தண்ணீரை வெளியேற்றுகிறது கேரள அரசு. தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது. அதுகுறித்த தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு தமிழகத்தில் மதிப்பில்லை.

“திமுகவைப் பொறுத்தவரை விவசாயிகளுக்கு எதிரான கொள்கை என்ற நிலைப்பாட்டை கையில் எடுத்துள்ளது. நிலவரிச் சட்டம் கொண்டு வந்தபோதே, அது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ஆட்சி என்பதை உறுதிப்படுத்தி விட்டது.

“நீர்ப்பாசனத்தை எதிர்பார்க்கும் ஏழை விவசாயிகளின் உரிமைகளை திமுக ஆட்சி எப்படி மீட்டெடுக்கும். எதிர்க்கட்சியாக இருக்கும் போது விவசாயிகள் நினைப்பதற்கு முன்பாகவே திமுக போராட்டங்களை கையில் எடுத்தது. தமிழகத்தில் விவசாயிகளுக்கான உரிமைகளை பாதுகாக்க வேண்டுமெனில் திமுக எப்போதும் எதிர்க்கட்சியாக இருப்பதே நல்லது. ஆளும் கட்சியானால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தான் நல்லது,” என்று பாண்டியன் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்