தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனைத்துலக ஆயுத இறக்குமதி: இரண்டாம் இடத்தில் இந்தியா, முதலிடத்தில் உக்ரேன்

2 mins read
95d987f3-1060-413c-806c-c699ac82fbca
உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்களைக் கொள்முதல் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது இந்தியா. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: உலகளாவிய ஆயுத இறக்குமதியில் 8.3 சதவீதத்தை பெற்றுள்ள இந்தியா, பெரிய ஆயுத இறக்குமதியாளர்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதுவரை முதலிடத்தில் இருந்த சவுதி அரேபியாவைப் பின்னுக்குத் தள்ளி, அந்த இடத்தை உக்ரேன் கைப்பற்றியுள்ளது.

சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள அனைத்துலக அமைதி ஆராய்ச்சி நிலையமானது அவ்வப்போது உலக நாடுகளின் ஆயுத விற்பனை, கொள்முதல், ஆயுதக் குறைப்பு நடவடிக்கைகள் தொடர்பான புள்ளி விவரங்கள், அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.

தற்போது கடந்த 2020 முதல் 2024 வரையிலான காலக்கட்டத்தில் ஆயுத இறக்குமதியில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகள் தொடர்பான விவரங்களை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

அது வெளியிட்ட அறிக்கையில் முதலிடத்தில் உள்ள உக்ரேன் தற்போது ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டுள்ளதால், மற்ற உலக நாடுகளைவிட அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்து வருகிறது.

இரண்டாவது இடம் பிடித்துள்ள இந்தியாவின் ஆயுத இறக்குமதியானது, முந்திய ஐந்து ஆண்டு காலத்தைவிட கடந்த 2020 - 2024 வரையிலான காலக்கட்டத்தில் குறைந்துள்ளது. உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்களைக் கொள்முதல் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது இந்தியா.

மேற்காசிய நாடான கத்தார் மூன்றாவது இடத்திலும் சவுதி அரேபியா நான்காவது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தானுக்கு ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது. ஜப்பான், ஆஸ்திரேலியா, எகிப்து, அமெரிக்கா, குவைத் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இதனிடையே, பஹல்காம் தாக்குதலை அடுத்து, தனது பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில், 231.6 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது என அதன் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. இதற்காக, 13 புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அந்த அமைச்சு மேலும் கூறியது. வான் பாதுகாப்பை உறுதி செய்யவும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையாகவும் புதிய ஆயுதங்களை வாங்க இந்தியா முடிவு செய்திருக்கிறது.

குறிப்புச் சொற்கள்