அள்ளிக் கொடுத்த இந்தியச் செல்வந்தர்கள்; 10,380 கோடி ரூபாய் நன்கொடை

2 mins read
5419e752-4e88-4a23-b94a-350061ea4eaa
ஷிவ் நாடார். - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவில் உள்ள செல்வந்தர்கள் நன்கொடை அளிப்பது அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் இவர்கள் ரூ.10,380 கோடியை நன்கொடையாக வாரிக் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பான விவரங்களை ஹுருன் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்நிறுவனம் தயாரித்துள்ள பட்டியலின்படி, அதிக நன்கொடை அளிக்கும் செல்வந்தர்கள் பட்டியலில் பிரபல தொழிலதிபரும் ஹெச்சிஎல் நிறுவனத்தின் உரிமையாளருமான ஷிவ் நாடார் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.

அவர் நாள்தோறும் ஏறக்குறைய ரூ.7.40 கோடி நன்கொடை அளிக்கிறார். பல்வேறு காரணங்களுக்காக இவர் நன்கொடையாக வழங்கியுள்ள தொகை ரூ.2,700 கோடியாகும்.

இந்தப் பட்டியலில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்கு முறை, ஷிவ் நாடாரே முதலிடம் பிடித்துள்ளார் என்கிறது ஹுருன் நிறுவனத்தின் ஆய்வறிக்கை.

ஐந்து கோடி ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடை வழங்கிய 191 பேர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களில் 12 பேர் புதிதாக இடம்பெற்றுள்ளனர் என்றும் பட்டியலில் 24 பெண்களும் அடங்குவர் என ஹுருன் நிறுவனம் கூறியது. மொத்த நன்கொடை மதிப்பு கடந்த மூன்று நிதியாண்டுகளில் 85% அதிகரித்துள்ளது.

நிறுவனங்களைப் பொறுத்தவரை, ரூ.850 கோடி அளித்து ‘இன்ஃபோசிஸ்’ முதலிடம் பிடித்துள்ளது.

‘ஜெரோதா’வின் நிகில் காமத் தொடர்ந்து நான்காவது ஆண்டாக இளம் நன்கொடையாளராக நீடிக்கிறார்.

நன்கொடையாளர்கள் பட்டியலின் முதல் 25 இடங்களுக்குள் இடம்பெறுவதற்கான உச்ச வரம்பு, 70 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் கடந்த 2014ஐ விட இது 180% அதிகம் என்றும் தெரியவந்துள்ளது.

பட்டியலில் முதல் 25 இடங்களில் உள்ள செல்வந்தர்கள் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.50,000 கோடி நன்கொடைகளை வாரி வழங்கியுள்ளனர்.

அதாவது நாள்தோறும் இவர்கள் 25 பேரும் சராசரியாக வழங்கிய நன்கொடை ரூ.46 கோடி.

கடந்த நிதியாண்டில், 204 கோடி ரூபாய் வழங்கிய ரோஹிணி நிலேகனி, பெண் நன்கொடையாளரில் முதலிடம் பிடித்துள்ளார்.

65 வயதாகும் இவர், ‘அக்‌ஷரா’ ஃபவுண்டேஷன் தலைவராக உள்ளார்.

குறிப்புச் சொற்கள்