புதுடெல்லி: இந்தியாவின் அகமதாபாத் நகரில், ஏர் இந்தியா விமான விபத்து அதிர்ச்சியில் இருந்து மீளுவதற்குள், அந்நிறுவனத்துக்கு கடந்த இரு நாள்களில், அடுத்தடுத்து அதிர்ச்சிகள் காத்திருந்தன.
திங்கட்கிழமை (ஜூன் 16), சான் ஃபிரான்சிஸ்கோவில் இருந்து மும்பை நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் ‘இன்ஜின்’ பகுதியில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக, கோல்கத்தாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாகவும் அதிலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடுவானில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, அதன் இரு ‘இன்ஜின்’களில் ஒன்று பழுதடைந்தது தெரியவந்தது.
இதுகுறித்து விமான நிலைய தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார் விமானி.
இதையடுத்து, அருகில் இருந்த கோல்கத்தா விமான நிலையத்தில் விமானத்தைத் தரையிறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
அதன் பேரில், நள்ளிரவு 12.45 மணிக்கு கோல்கத்தாவிற்கு வந்த விமானத்தில் இருந்து பயணிகளை உடனடியாகத் தரையிறக்க முடியவில்லை என்றும் நீண்ட நேரத்துக்குப் பிறகு அனைவரும் தரையிறங்கினர் என்றும் கூறப்படுகிறது.
இதேபோல், ஹஜ் பயணிகளுடன் லக்னோ நோக்கி வந்த சவுதியா ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கியதும் அதன் சக்கரத்தில் இருந்து புகை எழுந்தது. எனினும், பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
எதனால் புகை வந்தது என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
மற்றொரு சம்பவத்தில், ஃபிராங்க்ஃபர்ட் நகரில் இருந்து ஹைதராபாத் சென்ற லுஃப்தான்சா விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மீண்டும் அது புறப்பட்ட விமான நிலையத்திற்கே திரும்பிச் சென்றது.
விமான நிலைய அதிகாரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.
அந்த விமானம் ஜூன் 15ஆம் தேதி ஃபிராங்க்ஃபர்ட்டில் இருந்து புறப்பட்டு, 16 அதிகாலை ஹைதராபாத் சென்றடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது.