உத்தரப் பிரதேசம்: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள செங்கல் சூளையில் கட்டுமான ஊழியராக வேலை பார்க்கிறார் 35 வயது மிகிலால் கௌதம்.
கடந்த திங்கட்கிழமை (ஜூன் 23), வேலையிடத்தில் தன்னைத் தாக்கிய சிறுத்தையை அவர் வெறுங்கையால் அடித்து விரட்டினார்.
மூர்க்கமாகத் தாக்கிய சிறுத்தையை மல்யுத்தம் செய்து கௌதம் வீழ்த்தியதைக் காட்டும் காணொளி எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 350,000க்கும் மேற்பட்ட பார்வைகளை அது பெற்றுள்ளது.
காட்டுப் பகுதியிலிருந்து செங்கல் சூளைக்குள் வந்த அந்தச் சிறுத்தையின் கழுத்து, தலை, கால்கள் ஆகியவற்றை அழுத்திப் பிடித்து அவர் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடுவதை அந்தக் காணொளியில் காண முடிகிறது.
செங்கல் சூளையில் கௌதம் சாம்பலை அள்ளச் சென்றபோது, பதுங்கியிருந்த சிறுத்தை அவரைத் தாக்கியதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
கௌதமின் கூக்குரலைக் கேட்ட இதர ஊழியர்கள் சம்பவ இடத்தில் கூடினர். சற்று மேடான இடத்திலிருந்து சிறுத்தையின் மீது அவர்கள் செங்கற்களை வீசினர்.
ஒருகட்டத்தில் சிறுத்தை அருகிலுள்ள வாழைத் தோட்டத்திற்குள் தப்பியோடியதாகக் கூறப்பட்டது.
கடுமையான காயங்களுடன் கௌதம் உயிர்பிழைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
வனத்துறையினர் அந்தச் சிறுத்தையைத் தேடிக் கண்டுபிடித்தபோது அது மீண்டும் தாக்கியதாகவும் அதில் ஐவர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது.
பின்னர் காவல்துறையினரும் தேடல் வேட்டையில் இணைந்துகொண்டனர். மயக்க ஊசி மூலம் அந்தச் சிறுத்தை பின்னர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
அதன் உடல்நிலை சோதிக்கப்படுவதாகவும் மீட்பு நிலையத்துக்கு அது அனுப்பப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.