சுங்கக் கட்டணக் கொள்கைத் திருத்தம் குறித்து இந்திய அரசு பரிசீலனை

2 mins read
6691aab7-59cc-478b-9680-eb00feaac60f
வாகன இயக்கச் செலவு, வாகனச் சேதக் காரணி, கட்டணம் செலுத்துவதில் பயனரின் தயார்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தற்போதையக் கட்டண முறை அமைந்துள்ளது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய நெடுஞ்சாலைகளுக்கான சுங்கக் கட்டணக் கொள்கையில் திருத்தம் செய்வது குறித்து இந்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

இப்போதைய போக்குவரத்து அமைப்பு முறை, நடைமுறைச் செலவுகள், சாலைத் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டண முறையை வகுப்பதே இலக்கு.

வாகன இயக்கச் செலவு, வாகனச் சேதக் காரணி, கட்டணம் செலுத்துவதில் பயனரின் தயார்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தற்போதைய கட்டண முறை அமைந்துள்ளது.

ஆயினும், 1995ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட விதிகளின் அடிப்படையில் அம்முறை வகுக்கப்பட்டதால் அது காலாவதியாகிவிட்டதாகக் கருதப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகள் 2008ன்கீழ் ஆண்டுதோறும் சுங்கக் கட்டணங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன. இப்போது வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணமானது மொத்தவிற்பனை விலைக் குறியீட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது. அது 2025 ஏப்ரல் 1ஆம் தேதி நடப்பிற்கு வந்தது.

கட்டுமானம், பராமரிப்பிற்கான மொத்தச் செலவு, லாப வரம்பு ஆகியவற்றின் கூட்டுத்தொகையைச் சாலையைப் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கையால் வகுப்பதன்மூலம் சுங்கக் கட்டணம் கணக்கிடப்படுகிறது.

இந்நிலையில், நிதி ஆயோக் அமைப்பானது இப்போதைய சுங்கக் கட்டண முறையை மறுஆய்வு செய்து, இந்த நிதியாண்டு இறுதிக்குள் சாலைப் போக்குவரத்து அமைச்சிடம் தனது பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும்.

இப்போதைக்கு இந்தியாவிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 855 சுங்கச்சாவடிகள் உள்ளன. அவற்றில் 675 பொதுத்துறையைச் சேர்ந்தவை. எஞ்சிய 180 சாவடிகளும் பொதுத்துறை - தனியார்துறை பங்காளித்துவத்துடன் செயல்படுகின்றன.

கடந்த 2024-25 நிதியாண்டில் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் மூலம் ரூ.73,000 கோடி (S$10.72 பில்லியன்) வசூலிக்கப்பட்டது. இந்த நிதியாண்டில் அது ரூ.80,000 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டின் முதல்பாதியில் மட்டும் ரூ.40,433 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது, அதற்கு முந்திய நிதியாண்டின் முற்பாதியைவிட 18.6 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்