துபாய்: இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் ஒன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) பிற்பகல் துபாய் விமானக் காட்சியில் சாகசத்தில் ஈடுபட்டிருந்தபோது விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.10 மணியளவில் அல் மக்தூம் அனைத்துலக விமான நிலையத்தில் பலரது கண்முன்னே அவ்விபத்து நேர்ந்தது.
இச்சம்பவத்தில் விமானி உயிரிழந்துவிட்டதை இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.
“துபாய் விமானக் காட்சியில் சாகசத்தில் ஈடுபட்டிருந்தபோது இந்திய விமானப் படையின் தேஜஸ் விமானம் ஒன்று விபத்திற்குள்ளானது. அதில் அதன் விமானி உயிரிழந்துவிட்டார். அவரது மறைவால் இந்திய விமானப் படை வருத்தத்தில் ஆழ்ந்துள்ளது. இந்தத் துயரமான நேரத்தில் அவரின் குடும்பத்தாருக்குத் துணைநிற்போம்,” என்று இந்திய விமானப் படை ஓர் அறிக்கை வழியாகத் தெரிவித்துள்ளது.
விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டு வருவதாகவும் அது தெரிவித்தது.
தேஜஸ் விமான விபத்து தொடர்பான காணொளி தற்போது இணையத்தில் பரவி வருகிறது. அதில், விமானம் தரையில் விழுந்து மோதுவதும் உடனே பெருந்தீப்பிழம்பு கிளம்புவதும் தெரிகிறது.
ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லக்கூடிய அந்த இலகுவகைப் போர் விமானம் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் (எச்ஏஎல்) தயாரிக்கப்பட்டது.
கடந்த ஈராண்டுகளில் தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கியது இது இரண்டாவது முறை.
தொடர்புடைய செய்திகள்
இதற்குமுன் 2024 மார்ச்சில் ராஜஸ்தானின் ஜெய்சல்மேரில் முதன்முறையாக தேஜஸ் போர் விமானம் விபத்திற்குள்ளானது. அவ்விமானத்திலிருந்து அதன் விமானி பாதுகாப்பாக வெளியேறினார்.
உலகின் ஆகப் பெரிய விமானக் கண்காட்சிகளில் ஒன்றான துபாய் விமானக் காட்சி ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இம்முறை நவம்பர் 17ஆம் தொடங்கிய அக்காட்சியின் இறுதிநாளில் தேஜஸ் போர் விமானம் விபத்திற்குள்ளானது.

