டிரம்ப் முடிவால் இந்திய விவசாயிகள் மகிழ்ச்சி

2 mins read
8d3dd923-75c2-4779-8ead-2bcdfb1acf78
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சில உணவுப் பொருள்களுக்கு அடிப்படை வரியை நீக்கியுள்ளார்.  - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சில உணவுப் பொருள்களுக்கு அடிப்படை வரியை நீக்கியுள்ளதால் இந்திய விவசாயிகளும் உணவு ஏற்றுமதியாளர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் உணவுப் பொருள்களுக்கான விலை அதிகரித்ததால் அதிபர் டிரம்ப் வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 14) மாட்டிறைச்சி உள்ளிட்ட 200க்கும் அதிகமான உணவுப் பொருள்களுக்கான அடிப்படை இறக்குமதி வரியை நீக்குவதாக அறிவித்தார்.

இதற்குமுன்னர் வியட்னாம், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் உணவுப் பொருள்களுக்கு 20 விழுக்காடுவரை மட்டுமே அடிப்படை வரி விதிக்கப்பட்டது.

ஆனால், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் தேநீர், காப்பி, முந்திரி, கொட்டைவகைகள், மசாலா பொருள்களுக்கு டிரம்ப் நிர்வாகம் 50 விழுக்காடு விதித்திருந்தது. இது இந்திய விவசாயிகளுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் பேரடியாக இருந்தது.

ர‌ஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த மறுத்ததால் அமெரிக்கா இறக்குமதி வரியைக் கூட்டியது குறிப்பிடத்தக்கது.

தற்போது அறிவிக்கப்பட்ட சலுகைகள்மூலம் 3 பில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான ஏற்றுமதிகளுக்கு வரிவிலக்கு கிடைக்கும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

“வரிகளால் மிகுந்த நெருக்கடி ஏற்பட்ட நிலையில், இனி உணவுப்பொருள்களை ஏற்றுமதியாளர்கள் சரியான விலையில் விற்க ஏதுவாகவும் இருக்கும்,” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

தற்போது அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தியாவுக்கு எதிரான வரியை அமெரிக்கா விரைவில் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு எதிராக இறக்குமதி வரியை உயர்த்தியதால் அந்நாட்டின் ஏற்றுமதி பெரிதாகப் பாதிக்கப்பட்டு, பல துறைகளும் தடுமாறின.

குறிப்புச் சொற்கள்