இந்தியப் பொருளியல் இனியும் பலவீனமானதன்று: பியூஷ் கோயல்

2 mins read
9090e347-030e-477d-b6d7-b988020e5109
பியூஷ் கோயல். - படம்: ஏஎன்ஐ

புதுடெல்லி: அமெரிக்க வரிவிதிப்பின் தாக்கம் குறித்து இந்திய அரசு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் இந்தியாவின் நலனைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும் என அவர் நாடாளுமன்றத்தில் பேசும்போது குறிப்பிட்டார்.

பலவீனமான பொருளியல் என்ற நிலையில் இருந்து, உலகின் ஐந்தாவது ஆகப்பெரிய பொருளியல் என்ற நிலையை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்றும் பியூஷ் கோயல் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா, ரஷ்யா பொருளியல் மீட்க முடியாத நிலையில் இருப்பதாக தமது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அமைச்சர் பியூஷ் கோயல் மேற்குறிப்பிட்ட கருத்தை கூறியிருப்பதாகத் தெரிகிறது.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு, பலவீனமான பொருளியல் நாடுகளின் பட்டியலில் இருந்த இந்தியா, தற்போது அதிலிருந்து வெளிவந்து, உலகின் வேகமாக வளரும் பொருளியலாக மாறி வருகிறது என்று மக்களவையில் பேசும்போது குறிப்பிட்ட அவர்,

கடின உழைப்பின் அடிப்படையில், 11வது பெரிய பொருளியல் என்ற நிலையில் இருந்து உலகின் முதல் 5 பொருளியலுக்குள் இந்தியா வந்துள்ளது என்றார்.

இதற்கிடையே, இந்திய அரசாங்கம் தனது தொழில்துறை பங்குதாரர்களுடன் அமெரிக்க வரிவிதிப்பு குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் வர்த்தகம், தொழில்துறை அமைச்சு ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

“விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர், தொழிலதிபர்கள், ஏற்றுமதியாளர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தொழில்துறை பங்குதாரர்களின் நலனைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது. நமது தேசிய நலனைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்,” என்றார் பியூஷ் கோயல்.

குறிப்புச் சொற்கள்