கோல்கத்தா: அந்நியச் செலாவணி மோசடியில் தொடர்பு உள்ளதாக நம்பப்படும் தொழிலதிபர் ஒருவர் கடந்த பத்து ஆண்டுகளில் 900 முறை தாய்லாந்து தலைநகர் பேங்காக் சென்று திரும்பியுள்ளது அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் வினோத் குப்தா. தொழிலதிபரான இவர், முறைகேடான பணப் பரிமாற்றங்களில் ஈடுபட்டு வருவதாக எழுந்த புகார்களை அடுத்து, அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. மேலும், கடந்த ஆண்டு இறுதியில் போலி கடப்பிதழ் மோசடியிலும் இவரது பெயர் அடிபட்டது.
இதையடுத்து, அந்நியச் செலாவணி மோசடியின்கீழ், வினோத் குப்தா மீது வழக்குப் பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது போலி கடப்பிதழ், முறைகேடான பணப்பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள், வினோத் குப்தாவின் ‘ஹவாலா’ தொடர்புகள் குறித்து முக்கியமான ஆதாரங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
மேலும், முறைகேடான பணப்பரிவர்த்தனை மூலம் கிடைத்த பெருந்தொகைகள் இந்தியாவின் அண்டை நாடான பங்ளாதேஷுக்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதால் அவரிடம் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
இதனிடையே, கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் பேங்காக்குக்கு ஏறக்குறைய 900 முறை பயணம் மேற்கொண்டுள்ளார் வினோத் குப்தா.
அவர் எதற்காக அங்கு சென்றார், யாரையெல்லாம் சந்தித்தார் என்ற கோணத்தில் விசாரணை நீடித்து வருகிறது.
முதற்கட்ட விசாரணையில், அவர் நறுமணப் பொருள்களை விற்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும் அதன் பொருட்டு அவ்வப்போது வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

