நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்தியது இந்தியா

3 mins read
a506ac98-6b32-472e-87bb-4dc26e992906
மன்சுக் மாண்டவியா. - படம்: ஊடகம்

புதுடெல்லி: புதிய தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் தொழிலாளர்களுக்கு சிறந்த ஊதியம், பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதியளிக்கும் புதிய தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த வழிவகை உருவாகியுள்ளது.

இந்தியாவில் பல்லாண்டுகளாக நடைமுறையில் உள்ள பழைமை வாய்ந்த தொழிலாளர் சட்டங்களை எளிமைப்படுத்தவும் நெறிப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக செவிசாய்க்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், நான்கு புதிய தொழிலாளர் சட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இப்புதிய சட்டங்கள் தொழிலாளர்களுக்கு பல்வேறு வகையிலும் உதவிகரமாக இருக்கும் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தமது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஊதியக் குறியீடு, 2019, தொழில்துறை உறவுகள் குறியீடு, 2020, சமூகப் பாதுகாப்புக் குறியீடு, தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் குறியீடு 2020 ஆகியவை உடனடியாக (நவம்பர் 23 முதல்) நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சீர்திருத்தங்கள் சாதாரண மாற்றங்கள் மட்டுமல்ல, நாட்டின் ஒவ்வொரு தொழிலாளியின் கண்ணியத்திற்கான அரசாங்கத்தின் உத்தரவாதம் என்று திரு மாண்டவியா தமது பதிவில் தெரிவித்துள்ளார்.

நான்கு புதிய தொழிலாளர் குறியீடுகள் அனைத்து தொழிலாளர்களுக்கும் சரியான நேரத்தில் குறைந்தபட்ச ஊதியம், இளையர்களுக்கான நியமனக் கடிதங்கள், பெண்களுக்கு சம ஊதியம், மரியாதை, 40 கோடி தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓராண்டு பணிக்காலத்துக்குப் பிறகான நிலையான பணிக்கொடை ஆகியவற்றை உறுதி செய்யும் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு செயல்படுத்த உள்ள இந்தச் சீர்திருத்தங்கள் 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகள், உரிமைகளைப் பெற்றுத் தரும்.

குறிப்பாக, இலவச வருடாந்திர சுகாதாரப் பரிசோதனைகள், கூடுதல் நேரத்திற்கு இரட்டை ஊதிய விகிதம், அபாயகரமான துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு முழு சுகாதாரப் பாதுகாப்பு, அனைத்துலக தரத்தின்படி தொழிலாளர்களுக்கான சமூக நீதியை உறுதி செய்யும்.

இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த பத்தாண்டுகளில், சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்தியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு 19% ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த தொழிலாளர் எண்ணிக்கையானது நடப்பாண்டில் 64%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இத்தகவலை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சு வெளியிட்டு உறுதி செய்துள்ளது.

“நான்கு தொழிலாளர் குறியீடுகளை செயல்படுத்துவது இந்தப் பாதையில் முன்னோக்கி எடுத்து வைத்துள்ள அடுத்த அடியைக் குறிக்கிறது. சமூகப் பாதுகாப்பு வலையை மேலும் விரிவுபடுத்துகிறது,” என்று அந்த அமைச்சு வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, நாட்டில் ஏறக்குறைய 25 கோடி இளையர்கள் வேலையில்லாமல் உள்ளனர் என்றும் வேலைவாய்ப்புக்கான எந்தத் திட்டமும் அரசிடம் இல்லை என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாடியுள்ளது.

இந்தியாவில் தொழிலாளர் நலன்களுக்காக 44 சட்டங்கள் இருந்த நிலையில், அவற்றை ரத்து செய்துவிட்டு நான்கு சட்டங்களாக மத்திய அரசு சுருக்கிவிட்டதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

கொரோனா காலத்தில் அவசர, அவசரமாக கொண்டு வரப்பட்ட இந்த மசோதாக்களுக்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்