புதுடெல்லி: ஐநா பொருளியல், சமூக மன்றத்தின் உறுப்பு நாடாக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்தியாமீது அம்மன்றத்தின் உறுப்பு நாடுகள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் வெளிப்படுத்தியுள்ள ஆதரவுக்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.
2026 முதல் 2028 ஆண்டு வரையிலான தவணைக்கு இந்தியா அம்மன்றத்தின் உறுப்பு நாடாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தகவலை அவர் புதன்கிழமை (ஜூன் 4) அறிவித்தார்.
வளர்ச்சி சார்ந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்னெடுப்பதற்கும் பொருளியல், சமூக கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் தொடர்ந்து பணியாற்ற இந்தியாவின் கடப்பாட்டை அவர் உறுதி செய்தார்.
நியூயார்க்கில் உள்ள ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பேராளர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்த ஜெய்சங்கர், விவாதம் மற்றும் புதுமையான சிந்தனையை வளர்ப்பதற்கு ஐநா பொருளியல், சமூக மன்றம் முக்கியமான தளம் என்றார்.
மேலும், முன்னோக்கிய வழிகளில் ஒத்த கருத்தை உருவாக்குவதற்கும் அனைத்துலக அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கும் இந்தத் தளம் அவசியமானது என்றும் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டி உள்ளார்.
2026ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தியா இந்த உறுப்பினர் பதவியில் நீடிக்கும்.
இதற்குமுன் 2008 முதல் 2020 வரை நான்கு முறை இந்தியா அம்மன்றத்தில் இடம்பெற்றிருந்தது.

