புதுடெல்லி: உலக அளவில் அமெரிக்கா கொண்டுள்ள முக்கியமான உறவுகளில் இந்தியாவும் ஒன்று என்று இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக நியமிக்கப்படவிருக்கும் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.
இந்தியா எப்போதுமே அமெரிக்காவின் உத்திபூர்வ பங்காளியாக இருப்பதாக அவர் அமெரிக்க செனட் சபை முன்பு நடத்தப்பட்ட தனது பணி நியமனத்துக்கான உறுதிப்படுத்துதல் விசாரணையை எதிர்கொண்டபோது குறிப்பிட்டார்.
இந்தியா, அமெரிக்கா இடையே வரி விதிப்புகளில் பெரிய இடைவெளி இல்லை என்றும் செர்ஜியா கோர் கூறியுள்ளார்.
“வரும் வாரங்களில் வர்த்தகப் பிரச்சினைகள் தீர்க்கப்படக்கூடும். அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நீண்டகால உத்திபூர்வ இலக்குகள் உள்ளன. இந்தியா இன்று அமெரிக்காவிற்கு உள்ள முதன்மையான நட்பு நாடுகளில் ஒன்று,” என்றார் செர்ஜியா கோர்.
சீனாவுடன் இருப்பதைவிடவும் அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு நெருக்கமான உறவு உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சீனாவைவிட அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு அதிக பொதுவான விஷயங்கள் உள்ளன என்றார்.
இந்தியாவுடன் தற்காப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் திரு கோர் கூறினார்.
இந்தியாவின் புவியியல் நிலை, பொருளியல் வளர்ச்சி, ராணுவத் திறன்கள் ஆகியவை வட்டார நிலைத்தன்மையின் மூல ஆதாரங்களாகவும் இரு நாடுகளின் செழிப்பை மேம்படுத்துவதிலும் பாதுகாப்பு நலன்களை முன்னேற்றுவதிலும் ஒரு முக்கியப் பகுதியாக அமைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“இந்தியாவின் 1.4 பில்லியன் மக்கள் தொகையும் அதன் வேகமாக வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கமும் அமெரிக்காவிற்குச் செயற்கை நுண்ணறிவு முதல் மருந்துகள், முக்கியமான தாதுக்கள் வரை மகத்தான வாய்ப்புகளை வழங்குகின்றன.
தொடர்புடைய செய்திகள்
“அடுத்த வாரம் வாஷிங்டனுக்கு வருகை தர இந்தியக் குழுவை அமெரிக்கவுக்கு அழைத்துள்ளோம். இரு தரப்பினரும் ஒரு ஒப்பந்தத்தை உறுதிசெய்யும் கட்டத்தை நெருங்கி உள்ளனர்,” என்றார் திரு செர்ஜியோ கோர்.
இந்தியா, சீனாவுடன் நெருக்கம் காட்டுவது கவலை அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், சீன விரிவாக்கம் என்பது இந்திய எல்லையில் மட்டுமல்லாமல், அவ்வட்டாரம் முழுவதும் உள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, தனது மிகவும் நம்பகமான உதவியாளர்களில் ஒருவரை இந்தியாவிற்கான அடுத்த அமெரிக்கத் தூதராகப் பணியாற்ற அனுப்பி வைப்பதாக, அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் வினய் குவாட்ரா கூறினார்.
ஆகஸ்ட் 22ஆம் தேதியன்று, இந்தியாவின் அடுத்த தூதராக நெருங்கிய உதவியாளர் செர்ஜியோ கோரை பரிந்துரைப்பதாக அறிவித்தார் திரு டிரம்ப்.

