புதுடெல்லி: வரும் 2047ஆம் ஆண்டிற்குள் 350-400 விமான நிலையங்களை அமைக்க இந்தியா இலக்கு கொண்டுள்ளது என்று அந்நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
வாய்ப்புகள், வளர்ச்சி, இணைப்பு, விமானப் பயணப் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்த இந்தியா கொண்டுள்ள கடப்பாட்டை இந்த உட்கட்டமைப்பு விரிவாக்கம் வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
தலைநகர் டெல்லியிலுள்ள விக்யான் பவனில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) தொடங்கிய ஆசிய பசிபிக் வட்டார விபத்துப் புலனாய்வுக் குழுவின் முதலாவது சந்திப்பில் அமைச்சர் நாயுடுவின் அறிக்கை வாசிக்கப்பட்டது.
விமான விபத்து விகிதத்தைப் பொறுத்தமட்டில், கடந்த பத்தாண்டுகளில் அனைத்துலகச் சராசரியைவிட ஆசிய வட்டாரத்தில் தொடர்ந்து குறைவாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், அனைத்துலக விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் (ஐசிஏஓ) தரநிலைகளையும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளையும் அமல்படுத்துவதில் இந்தியா குறிப்பிட்ட முன்னேற்றம் அடைந்துள்ளதாகத் திரு நாயுடு தெரிவித்தார்.
கடந்த 2018ஆம் ஆண்டில் 70 விழுக்காடாக இருந்த அந்த இணக்க மதிப்பெண், தற்போது 85 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக அவர் சொன்னார். அத்துடன், பாதுகாப்பு ஒழுங்குவிதிகளை உறுதிசெய்வதில் 112ஆம் நிலையிலிருந்த இந்தியா, 2023ஆம் ஆண்டில் 55ஆம் நிலைக்கு முன்னேறியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
விமான விபத்து புலனாய்வுப் பிரிவு நடத்திவரும் அந்த நான்கு நாள் நிகழ்ச்சியில் விமானப் போக்குவரத்து அமைச்சு, விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்ககம், ஐசிஏஓ ஆசிய பசிபிக் வட்டார அலுவலகம் ஆகியவற்றின் அதிகாரிகளும் பல்வேறு நாடுகளின் பேராளர்களும் கலந்துகொள்கின்றனர்.

