ரஷ்ய ராணுவத்தில் சேர வேண்டாம்: குடிமக்களுக்கு இந்தியா அறிவுறுத்து

2 mins read
6242d402-5f17-49db-bfd6-bfd6109abcd1
எத்தகைய சலுகைகளை வழங்குவதாகக் கூறினாலும் ரஷ்ய ராணுவத்தில் சேர வேண்டாம் என இந்தியர்களிடம் வெளியுறவு அமைச்சு வலியுறுத்தி இருக்கிறது. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: ரஷ்ய ராணுவத்தில் சேர வேண்டாம் என்று தனது குடிமக்களுக்கு இந்திய அரசாங்கம் அறிவுறுத்தி இருக்கிறது.

ரஷ்யாவிற்குச் சென்ற இந்தியர்கள் பலர் உக்ரேனுக்கு எதிரான போரில் பங்கேற்கும்படி கட்டாயப்படுத்தப்படுவதாக வெளியான தகவல்களை அடுத்து, இந்த ஆலோசனை விடுக்கப்பட்டுள்ளது.

“ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் பலர் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை அறிந்துள்ளோம்.

“அதில் ஒளிந்துள்ள இடர்கள், ஆபத்துகள் குறித்து இந்திய அரசாங்கம் கடந்த ஓராண்டாகவே பலமுறை கோடிட்டுக்காட்டி, ரஷ்ய ராணுவத்தில் இணைய வேண்டாம் என இந்தியர்களை எச்சரித்து வந்துள்ளது,” என்று இந்திய வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கைமூலம் தெரிவித்துள்ளது.

இவ்விவகாரத்தை டெல்லியிலும் மாஸ்கோவிலும் உள்ள ரஷ்ய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுசென்றுள்ளதையும் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்களைச் சேர்க்கும் நடவடிக்கை முடிவிற்கு வரவேண்டும் என்றும் இப்போது அதிலுள்ள இந்தியர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

“பாதிக்கப்பட்ட இந்தியக் குடிமக்களின் குடும்பத்தாருடன் தொடர்பில் இருக்கிறோம்,” என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

கட்டுமான வேலை எனக் கூறி, இந்தியர்கள் இருவர் ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் ஆனால் அங்குச் சென்றபின் உக்ரேனுக்கு எதிராகச் சண்டையிடும்படி கட்டாயப்படுத்தப்பட்டு, தற்போது அவர்கள் உக்ரேனின் கிழக்குப் பகுதியான டொனெட்ஸ்க்கில் உள்ளதாகவும் தகவல் வெளியானது.

கடந்த 2024 நவம்பர் மாதம் ரஷ்யா கைப்பற்றிய செலிடோவ் நகரிலிருந்து தொலைபேசிவழி தொடர்புகொண்ட அவர்கள், குறைந்தது 13 இந்தியர்கள் தங்களைப் போலச் சிக்கிக்கொண்டுள்ளனர் என்று கூறியதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

எத்தகைய சலுகைகளை வழங்கினாலும் அத்தகைய வாய்ப்புகளை ஏற்க வேண்டாம் என இந்தியர்களிடம் வெளியுறவு அமைச்சு வலியுறுத்தி இருக்கிறது.

“ரஷ்ய ராணுவத்தில் சேருமாறு வரும் வாய்ப்புகளிலிருந்து விலகி இருக்கும்படி இந்தியர்களை மீண்டும் வலியுறுத்துகிறோம். அது ஆபத்து நிறைந்த பாதையாகும்,” என்று வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்