புதுடெல்லி: சுகாதாரம், குடும்ப நலன் அமைச்சின் சார்பாக மேற்கொண்ட பிரசார இயக்கத்தின் மூலம் இந்தியா மூன்று உலக சாதனைகளைப் புரிந்துள்ளது. அவை ‘கின்னஸ்’ புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் குடும்ப நலன், பெண்கள் வளர்ச்சிக்காக இந்திய அரசின் சுகாதார, குடும்ப நல்வாழ்வு அமைச்சு மேற்கொண்ட ‘ஸ்வஸ்த் நாரி, சஷக்த் பரிவார் அபியான்’ என்ற பிரசார இயக்கத்தின் மூலம் மூன்று உலக சாதனைகள் படைக்கப்பட்டன.
இதில், ஒரே மாதத்தில் குறிப்பிட்ட ஒரு சுகாதாரப் பராமரிப்புத் தளத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனர். மொத்தம் 3.21 கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்ததால் இது கின்னஸ் உலக சாதனையாகி உள்ளது.
அடுத்து, ஒரே வாரத்தில் இணையம் வழி மார்பகப் புற்றுநோய்ப் பரிசோதனைக்குப் பதிவு செய்த பெரும்பாலான மக்கள் என்ற சாதனையும் நிகழ்த்தப்பட்டது. 9.94 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர்.
மேலும், மாநில அளவில் ஒரே வாரத்தில் 1.25 லட்சம் பேர் முக்கியமான பல்வேறு அறிகுறிகள் சார்ந்த பரிசோதனைக்கு இணையம் வழி பதிவு செய்திருந்தனர் என்று இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இதற்காக மத்திய அரசு நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற பிரசார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், இந்த பிரசாரத்தில் இருபதுக்கும் மேற்பட்ட அமைச்சகங்கள் தீவிரமாக பங்கேற்றதாகவும் சுகாதார அமைச்சு கூறியது.
கடந்த செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை பிரசாரம் நடைபெறும் என்று முன்பே அறிவிக்கப்பட்டதால், அதிகமானோரை இத்தகவல் சென்றடைந்ததாகக் கருதப்படுகிறது.
ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பஞ்சாயத்து ராஜ் பிரதிநிதிகள், 1.14 கோடி பள்ளி , கல்லூரி மாணவர்கள், 94 லட்சம் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், ஐந்து லட்சம் பிற சமூக தள உறுப்பினர்கள் இந்தப் பிரசாரத்தில் பங்கேற்றனர்.

