புதுடெல்லி: இவ்வாண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவின் பெருநகரங்களைக் காட்டிலும் அடுத்தநிலை நகரங்களில் ஆட்சேர்ப்பு அதிகமாக இருந்தது தெரியவந்துள்ளது.
கடந்த 2024 செப்டம்பர் மாதத்தை ஒப்புநோக்க, இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் 2025 செப்டம்பரில் ஆட்சேர்ப்பு 21 விழுக்காடு அதிகமாகப் பதிவானது என்று ‘ஃபவுண்டிட்’ எனும் வேலை, திறனாளர் தளத்தின் மாத அறிக்கை தெரிவிக்கிறது.
கோவை, கொச்சி, ஜெய்ப்பூர், லக்னோ, இந்தூர், புவனேஸ்வர், சூரத், நாக்பூர், சண்டிகர் போன்ற நகரங்களில் வேலைக்கு ஆளெடுப்பது கூடுதலாகப் பதிவானது.
குறிப்பாக, மின்வணிகச் சேமிப்புக்கிடங்கு, சில்லறை விற்பனை விரிவாக்கம், வாடிக்கையாளர் சேவை, விழாக்காலச் சுற்றுப்பயணம் போன்ற துறைகளில் ஆட்சேர்ப்பு அதிகமாக இருந்தது.
“விழாக்காலத் தேவையையும் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்கள் நீண்டகாலத் திறனாளர் மையங்களாகக் கட்டமைக்கப்படுவது அதிகரித்து வருவதையும் இது காட்டுகிறது,” என்று ஃபவுண்டிட் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவுத் துணைத் தலைவர் அனுபமா பீம்ராஜ்கா கூறினார்.
“பெருநகரச் சந்தைகளில் நிலையான வளர்ச்சி இருக்கும் வேளையில், அடுத்தநிலை வட்டாரங்கள் ஆட்சேர்ப்பில் முன்னணியில் உள்ளது. மையப்படுத்தப்படாத, பலதரப்பட்ட, மீள்திறன்மிக்க வேலைவாய்ப்புச் சந்தையையும், வேலை தேடுவோர்க்கு வாய்ப்புகளை உருவாக்குவதையும், நாடு முழுதுமுள்ள நிறுவனங்களுக்கான உத்திபூர்வ நன்மைகளையும் இந்த மாற்றம் காட்டுகிறது,” என்றும் அவர் சொன்னார்.
அதேபோல, ஆண்டு அடிப்படையில் 17 விழுக்காடும் மாத அடிப்படையில் நான்கு விழுக்காடும் ஆட்சேர்ப்பு அதிகமாகப் பதிவானது என்றும் ஃபவுண்டிட் அறிக்கை தெரிவித்துள்ளது.
டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத், சென்னை, புனே, கோல்கத்தா போன்ற நகரங்களில் ஆட்சேர்ப்பானது ஆண்டு அடிப்படையில் 14 விழுக்காடு வளர்ச்சி கண்டது. தகவல் தொழில்நுட்பம், வங்கி, நிதி மற்றும் காப்புறுதிச் சேவைகள், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு போன்ற துறைகளே அதற்கு முக்கியக் காரணம்.
தொடர்புடைய செய்திகள்
அத்துறைகளில் தொழில்நுட்பம், நிதி மற்றும் சந்தைப்படுத்தல் வல்லுநர்களுக்கு மிகுந்த தேவை இருந்தது.