புதுடெல்லி: விண்வெளிக்கு முதலில் சென்றவர் அனுமன்தான் என்று பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இதற்குத் தமிழிசை செளந்தரராஜனும் ஆதரவுக் குரல் எழுப்பியுள்ளார்.
1969ல் நீல் ஆம்ஸ்ட்ராங் விண்வெளிக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பி.எம். ஸ்ரீ பள்ளியில் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாக்கூர் கலந்துகொண்டார்.
அப்போது அவர் மாணவர்களிடம், விண்வெளிக்கு முதலில் பயணம் செய்தவர் யார் என்று கேட்டார்.
மாணவர்கள் அனைவரும் ஒரே குரலில் நீல் ஆம்ஸ்ட்ராங் என பதிலளித்தனர்.
அதற்கு அனுராக் தாக்கூர், “எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமன்தான்,” என்று மாணவர்களிடம் கூறினார். பாஜக எம்.பி.யின் இந்தப் பேச்சால் மாணவர், பெற்றோர் உட்பட பலர் அதிர்ச்சியடைந்தனர்.
விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமன்தான் என்று அனுராக் தாக்கூர் பேசியதற்கு திமுக எம்.பி. கனிமொழி, மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
ஆனால் அனுராக் தாக்கூர் பேச்சுக்கு தமிழிசை செளந்தரராஜன் ஆதரவு தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், “இதிகாசங்களில் நிலவுக்கு அனுமன் சென்றார் என்ற பதிவு இருப்பதை அனுராக் தாக்கூர் சுட்டிக் காட்டுகிறார். இதில் தவறு இல்லை. எதை எடுத்தாலும் குறை சொல்வதா? விண்வெளிக்கு முதல் முதலில் சென்றது அனுமன் என அனுராக் தாக்கூர் நம்புகிறார். மெய்ஞானமும் விஞ்ஞானமும் ஏற்கெனவே இணைந்துதான் இந்திய நாட்டில் பரிணான வளர்ச்சியில் வளர்ந்து கொண்டு இருக்கிறது,” என்று குறிப்பிட்டார்.
“இந்தியாவில் மோடி அரசு வான்வெளியில் என்ன முன்னேற்றம் அடைந்து உள்ளது என்பதைப் பாருங்கள். அனுராக் தாக்கூர் பேசுவதை விட்டு முன்னேற்றத்தைப் பாருங்கள்,” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.