புதுடெல்லி: எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையின்போது பசுமைப் பட்டாசுகளைப் பயன்படுத்த அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போதவாக அறிவித்திருக்கிறது டெல்லி அரசு. எனினும் சமூக ஆர்வலர்களும் சில நிபுணர்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பசுமைப் பட்டாசுகள் மூலம் காற்று மாசு 30 விழுக்காடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், அவற்றில் தடைசெய்யப்பட்ட வேதிப் பொருள்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால் குறைவான மாசுதான் வெளிப்படும் எனக் கூறப்படுகிறது.
“இந்திய கலாசாரத்தில் தீபாவளி என்பது மிக முக்கியமான பண்டிகை என்றும், பல கோடி மக்களுக்காக நீதிமன்றத்தை அணுக முடிவெடுத்துள்ளதாகவும் டெல்லி முதல்வர் ரேகா குப்தா விளக்கம் அளித்துள்ளார்.
சுற்றுச்சூழலுக்கு உகந்தவை எனப் பசுமை பட்டாசுகளை நிபுணர்களில் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
உச்ச நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல், டெல்லியில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்யக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் பட்டாசுகளை உற்பத்தி செய்ய கடந்த மாதம் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றமும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து உருவாக்கிய பசுமைப் பட்டாசுகளில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்கள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை என்று ஒரு தரப்பு கூறுகிறது.
எனினும், ஒருவர் வெடிப்பது தடை செய்யப்பட்ட பட்டாசுகளையா அல்லது பசுமைப் பட்டாசுகளையா என்பதைக் கண்டறிவது சிரமம் என மற்றொரு தரப்பு வாதிடுகிறது.
2019ஆம் ஆண்டு முதல் டெல்லியில் அனைத்து வகை பட்டாசுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டது. எனினும், 2023ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்கும் பசுமைப் பட்டாசுகளை மட்டும் வெடிக்கலாம் என்ற உத்தரவு வெளியானது.