புதுடெல்லி: அனைத்துலக அளவில் தற்காப்புத் தளவாடங்களின் முன்னணி ஏற்றுமதியாளராக இந்தியாவை உருப்பெறச் செய்வதே தனது அரசின் முக்கியமான இலக்கு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஏவுகணைகளை வாங்குவதில் பல்வேறு உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாக அவர் கூறியுள்ளார்.
பிரதமராகப் பொறுப்பேற்றது முதல் ஒவ்வோர் ஆண்டும் இந்திய ராணுவ வீரர்களுடன் தீபாவளிக் கொண்டாடுவதே திரு மோடியின் வழக்கமாக உள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டு அவர் இந்திய கடற்படை வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார்.
கோவா கடற்பகுதியில் இந்திய போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் விக்ராந்த்’தில் அவர் கடற்படை வீரர்கள் மத்தியில் உரையாற்றும்போது பிரமோஸ், ஆகாஷ் ஏவுகணைகள், ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது தங்கள் திறன்களை நிரூபித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், இந்தியாவின் முப்படைகளுக்குமான ஆயுதங்கள், தளவாடக் கருவிகளை ஏற்றுமதி செய்யும் திறனை இந்தியா வளர்த்து வருவதாகப் பிரதமர் கூறினார்.
“கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் தற்காப்பு ஏற்றுமதி முப்பது மடங்கு அதிகரித்துள்ளது. இதற்குப் புதிதாகத் தொழில் தொடங்குவோர், உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவுகளின் பங்களிப்புகளே முக்கியமான காரணம்.
“போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் விக்ராந்த்’ உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்டது. இது ‘ஆத்ம நிர்பார் பாரத்’ என்ற ‘உள்நாட்டிலேயே தயாரிப்போம்’ என்ற முழக்கத்தின் சக்திவாய்ந்த சின்னமாக விளங்குகிறது,” என்றார் பிரதமர் மோடி.
‘ஆப்பரேஷன் சிந்துார்’ நடவடிக்கையின்போது, ஐஎன்எஸ் விக்ராந்த், பாகிஸ்தானுக்கு துாக்கமில்லா இரவுகளைத் தந்ததாகக் குறிப்பிட்ட அவர், கடற்படையின் துணிச்சலான வீரர்களுக்கு மத்தியில் தீபாவளியைக் கொண்டாடுவதை அதிர்ஷ்டமாகக் கருதுவதாகக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
‘விக்ராந்த்’ விமானம் தாங்கி கப்பலில் இருந்து விமானங்கள் புறப்படுவதையும் தரை இறங்குவதையும் ஆர்வமுடன் கண்டு வியந்த பின்னர், கடற்படை வீரர்களுக்கு இனிப்புகளை ஊட்டி மகிழ்ந்தார்.
இதையடுத்து, வீரர்களின் கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்த பிரதமர் மோடி, தீபாவளியன்று இரவு போர்க் கப்பலிலேயே தங்கினார்.

