அகமதாபாத்: உலக நாடுகள் பலவும் விண்வெளித்துறையில் தீவிர ஆர்வம் காட்டி வரும் நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் (ISRO) புதிய இலக்குகளை வகுத்துச் செயல்படுகிறது.
தற்போது, ரூ.10,000 கோடி செலவில் இந்தியாவின் இரண்டாவது ஆகப்பெரிய விண்வெளி மையத்தை அமைக்க அது திட்டமிட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தின் கடற்பகுதியில் இப்புதிய விண்வெளி நிலையம் அமைக்கப்படும் என்று விண்வெளி பயன்பாட்டு மைய இயக்குநர் நீலேஷ் தேசாய் சின்என்பிசிஇ (CNBC) நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார்.
மேலும், இத்திட்டத்தைச் செயல்படுத்த குஜராத் மாநிலத்தைச் தேர்வு செய்ததற்கான காரணத்தையும் அவர் விவரித்துள்ளார்.
குஜராத் மாநிலம் பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதால், உந்துகணை ஏவுதலின்போது எரிபொருள் நுகர்வு குறைவாக இருக்கும் என்றும் அம்மாநில அரசு 2025-–2030ஆம் ஆண்டுகளுக்கு ‘விண்வெளி தொழில்நுட்பக் கொள்கை’யை அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் திரு.நீலேஷ் சுட்டிக்காட்டினார்.
“இதன் மூலம் தொடர்புடைய துறையில் மாநில அரசின் ஆதரவு அதிகரித்துள்ளது. தனியார் துறை பங்கேற்பு, உற்பத்தி, ஏவுதல்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் கொள்கை இஸ்ரோவின் விண்வெளி மையத் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்றார் நீலேஷ் தேசாய்.
இந்திய அரசு தற்போது பொது, தனியார் கூட்டு முயற்சிகளை ஊக்குவித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அத்தகைய முயற்சிகள் மூலம் இஸ்ரோவின் புதிய விண்வெளி மையத்தின் உள்கட்டமைப்பு விரைவாக மேம்படுத்தப்படும் என்றார்.
குஜராத் இஸ்ரோ விண்வெளி மையத்தால் ஏறக்குறைய 25,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தொடர்புடைய துறைகளில் பெரிய அளவில் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் மணிகண்ட்ரோல் இணையத்தளம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
‘சந்திரயான்-5’, ‘ககன்யான்’ உள்ளிட்ட திட்டங்கள் வேகம் பெறவும் இப்புதிய விண்வெளி மையத்தின் பங்களிப்பு இருக்கும்.
“உள்ளூர் தொழில்கள், உபகரண உற்பத்தி, சேவைத் துறைகளுக்கு ஊக்கம் கிடைக்கும். இந்த மையத்திலிருந்து இஸ்ரோ எதிர்காலத்தில் பல வணிக, அறிவியல் திட்டங்களைச் செயல்படுத்தும். இதனால் பொருளியல் வளரும்.
“இம்மையத்துக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கிவிட்டன. 2035க்குள் முழுமையாக நிறைவு செய்தல் என்பது இஸ்ரோவின் இலக்கு.
“2040க்குள் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் இலக்கு நோக்கியும் நாம் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறோம்,” என்று நீலேஷ் தேசாய் மேலும் தெரிவித்துள்ளார்.