மியூனிக்: ஜெர்மனியின் டுசல்டார்ஃப் நகரில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 3,201 கோடி ரூபாய் ($467 மில்லியன்) பெறுமான மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
அவற்றின் மூலம் ஏறக்குறைய 6,250 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசாங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனிக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாகத்துடன் கூடிய வரவேற்பு நல்கப்பட்டது. டுசல்டார்ஃப் நகரில் நோர் பிரெம்ஸ், நோர்டெக்ஸ் குழுமம், இபிஎம்-பேப்ஸ்ட் ஆகிய நிறுவனங்களுடன் தமிழக அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டது.
நோர்-பிரெம்ஸ் நிறுவனம், காஞ்சிபுரத்திலும் சென்னையிலும் 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. அதன் மூலம் 3,500 பேருக்கு வேலைகள் உருவாக்கப்படும். ரயில்வே கதவுகளையும் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளையும் தயாரிக்கும் அதிநவீன வசதிகளுடன் கூடிய நிலையத்தை நிறுவப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகைசெய்கிறது.
உலகின் பெரிய காற்றாலை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான நோர்டெக்ஸ் குழுமம், திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் அதன் தற்போதைய ஆலையை விரிவுபடுத்த எண்ணுவதாகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. விரிவாக்கப் பணிகளுக்காக 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிடுகிறது அந்நிறுவனம். அதன் வழி 2,500 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மின்மோட்டார்கள், மின்விசிறிகளைத் தயாரிப்பதில் முன்னணி வகிக்கிறது இபிஎம்-பேப்ஸ்ட் நிறுவனம். சென்னையில் உலகளாவிய ஆற்றல் நிலையத்தை விரிவுபடுத்தவும் தமிழ்நாட்டில் உற்பத்தியைப் பெருக்கவும் 201 கோடி ரூபாய் முதலீடு செய்ய அது திட்டமிடுகிறது. அதன் தொடர்பில் 250 வேலைகளை உருவாக்க வழிவிடும் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
முதல்வர் ஸ்டாலின் பிஎம்டபிள்யு குழுமத்தின் மூத்த அதிகாரிகளுடனும் பேச்சு நடத்தினார். தமிழ்நாட்டில் அந்நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகள் குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு திரு ஸ்டாலின் இங்கிலாந்து போயிருக்கிறார். அங்கு அயலகத் தமிழ் அமைப்பினருடன் அவர் பேச்சு நடத்துகிறார். அங்கிருக்கும் தொழிலதிபர்களைச் சந்தித்துத் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கத் திட்டமிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

