தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கைப்பேசிகளைத் திருடி வெளிநாட்டிற்குக் கடத்திய கும்பல் கைது

1 mins read
320bb830-2603-49da-8a41-fa619adb8690
பிடிபட்டவர்களிடமிருந்து 300க்கும் மேற்பட்ட கைப்பேசிகள் மீட்கப்பட்டன. - படம்: டெல்லி காவல்துறை / எக்ஸ்

புதுடெல்லி: கைப்பேசிகளைத் திருடி, அவற்றை பங்ளாதேஷிற்குக் கடத்தும் கும்பலைச் சேர்ந்த எட்டுப் பேரை டெல்லி காவல்துறை கைதுசெய்துள்ளது.

பல்வேறு மாநிலத்தவர்களை உள்ளடக்கிய அக்கும்பலிடமிருந்து 300க்கும் மேற்பட்ட திருட்டுக் கைப்பேசிகளையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.

அக்கும்பல் நன்கு திட்டமிட்டுச் செயல்பட்டதாகத் தெற்கு டெல்லி காவல்துறைத் துணை ஆணையர் அங்கித் சௌகான் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

தாங்கள் களவாடிய கைப்பேசிகளை மேற்கு வங்க மாநிலத்திற்கு அனுப்பி, அங்கிருந்து பங்ளாதேஷிற்கு அனுப்பி வந்ததாகக் கூறப்பட்டது.

திருட்டுக் கைப்பேசிகளை வெளிநாட்டிற்குக் கடத்துவதற்கான காரணத்தையும் திரு சௌகான் குறிப்பிட்டார்.

“கைப்பேசி களவுபோனதாக இந்திய அரசாங்கத்தின் மத்திய கருவி அடையாளப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டதும் அதனை இந்தியாவிற்குள் வேறு எந்த இடத்திலும் பயன்படுத்த முடியாதபடி தடுக்கப்படும். அந்தத் தொழில்நுட்பச் சிக்கலிலிருந்து தப்புவதற்காகவே, திருடிய கைப்பேசிகளை அக்கும்பல் பங்ளாதேஷிற்கு அனுப்பிவந்துள்ளது,” என்று அவர் விளக்கினார்.

முன்னதாக, ஐரோப்பிய நாடான செர்பியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நேப்பாள நாட்டவர்களை ஏமாற்றிய போலி விசா கும்பலை டெல்லி காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு முறியடித்தது. அதன் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டதாகவும் இருவர் தலைமறைவாக இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்